“வாழ்க்கையில், எதையுமே மதிப்பீடு பண்ணமுடியாது. வாழ்கையையேக் கூட! ஒரு விஷயத்தை மதிப்பீடு பண்ணி முடிச்சு வச்சிருப்போம். எவனாவது ஒருத்தன் வந்து அது தப்புன்னு சொல்லுவான். இன்னொருத்தன் வந்து அவன் சொன்னதையும் மறுப்பான். எது நிஜம் எது பொய்யுன்னு எளிதா கண்டுபிடிக்க முடியாது... வாழ்க்கையின் சுவாரஸ்யமே அதுதான்" – கி.ராஜநாராயணன்.
கரிசல் இலக்கியத்தின் தந்தை, தேர்ந்த கதைசொல்லி. வட்டார வழக்கிற்கு, சொல்லகராதி தந்த மாமேதை. நடுத்தர மக்களின் கதைகள் கூட நளினமாகவே இயம்பப்பட்டு வந்த காலகட்டத்தில், இயல்பாக, தென்தமிழக பேச்சுவழக்கினை கதைகளில் உயிர்ப்பித்தவர். ‘அடிப்படையில் நானொரு விவசாயி’ என அடிக்கடி மார்தட்டிச் சொல்லும் இடைசெவல்காரர். எழுத்தாளர் கு.அழரிகிரிசாமியின் நண்பர், ரசிகமணி டி.கே.சியின் கடைசி காலத்துச் சீடர்.
“நான் மழைக்கு பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தை பார்க்காமல் மழையை பார்த்துக்கொண்டே இருந்துவிட்டேன்” – தனது படிப்பின்மையை நகைச்சுவையாக நம்மிடம் சேர்ப்பிக்கும் கி.ராவின் வரிகள் இவை. பள்ளிக்கூடத்தில் பெரும்பான்மையாக படிக்காத அவர்தான், வாழ்நாளின் இறுதிவரை புதுவை பல்கலைகழகத்தில் நாட்டுப்புறக்கதைகளை தொகுத்து வழங்கி, அங்கேயே சிறப்பு பேராசிரியராக பணியாற்றி, துறை தலைவராகவும் விளங்கியவர்.
கதவு: கி.ரா எழுதிய முதல் சிறுகதை. அப்போது அவருக்கு வயது, 41.
“நிறைய கதைகள் எழுதுவதில்லை. நிதானமா எழுதணும் ; அதனால் அது சிறப்பா இருக்கணும்னு கருதறேன் – விரும்புறேன்” என்பதே அவரின் வாதம். கரிசல் மண்ணை சேர்த்தவர்கள் ஒன்றிரண்டு கதைகளோடு வேறுபக்கம் திரும்பிய பின்னும் பிடிவாதமாக கடைசி வரை, கரிசலினை மட்டுமே மண்மணம் மாறாது எழுதி, கரிசல் மண்ணின் சாரத்தை சர்வதேசத்திற்கு எடுத்துச்சென்ற கி.ரா ஒரு சகாப்தம்.
குறிப்பிட்ட ஒரு சமூக மக்களின் இடப்பெயர்ச்சியின் வரலாற்றை மையப்படுத்தி எழுதப்பட்ட `கோபல்ல கிராமம்’, அதனை தொடர்ந்து, கரிசலின் வாழ்வியலையை, வெம்மையை, அதனினூடான கருணையை வெளிப்படுத்திய அவரின் "கோபல்லபுரத்து மக்கள்" சாகித்திய விருதினை அவருக்கு பெற்று தந்தது. ஏன் கரிசல் மண்ணின் மீது இத்துணை பிடிப்பு என்றதற்கு, ‘‘என்னுடைய மக்கள் பேசுகிற பாஷையில், அவர்கள் சுவாசிக்கிற காற்றின் வாடை, அவர்கள் பிறந்து விளையாடி நடந்து திரிகிற என் கரிசல் மண்ணின் வாசமெல்லாம் அப்படியே என் எழுத்துகளில் கொண்டுவந்துவிட வேண்டும் என்பது என்னுடைய தீராத விருப்பம். இந்த மண்ணை நான் அவ்வளவு ஆசையோடு நேசிக்கிறேன்’’ என்று பதில் மொழிந்திருந்தார்.
அவநம்பிக்கையும், சோர்வும், ஓயாத உழைப்பும் பெருகி விட்ட இந்தக்காலத்தில் கி.ராவின் கதைகள் அருகமரும் வெளிச்சம் போன்ற துணை. அவை நம் கைப்பிடித்து, நரம்புகளை மீட்டி எடுத்து கருணையையும், காருண்யத்தையும் அள்ளிவழங்கச் சொல்லும்.
சகமனிதரின் மீதான அன்பினை, நேசத்தினை உயிர்ப்போடு காத்துக்கொள்ள சொல்லும். ஒரு எளிய மனதினை வசப்படுத்துவதன் மூலம் வாழ்வின் உன்னதத்தை அடையவியலும் என்று நம்மை வசீகரிக்கும்.
அவருக்கு பட்டங்கள் வழங்கியுள்ளது புதுவை பல்கலைக்கழகமும், அரசாங்கமும். நினைவிடம் அமைத்து, அதனில் அவரின் சிலையும் நிறுவி, அவரின் மீதான நெகிழ்வை கொண்டாடுகிறது தமிழக அரசு. இப்படி அனைவரும் தூக்கி அரவணைத்து கொண்டாடும் இந்த கரிசல் தாத்தா, கி.ரா என்ற ஆளுமை குளிர்ந்து இன்றோடு இரண்டாண்டுகள் ஆகிவிட்டன.
போய்வாருங்கள் தாத்தா! இன்னும் உங்கள் எழுத்துகளை பற்பல ஆண்டுகள் வாசித்து வாசித்து மாய்ச்சல்படுவோம்!