ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் புதிய பதிப்பில் அப்பா, அண்ணா தமிழ் சொற்களும் ஹிந்தி சொல்லான ’அச்சா’வும் இடம் பிடித்துள்ளன.
ஆங்கிலம் தெரிந்தவர்கள் அதிகம் பயன்படுத்துவது ஆக்ஸ்போர்ட் அகராதி. அதன் புதிய பதிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் ஆயிரம் புதிய சொற்கள் இடம் பிடித்துள்ளன. குறிப்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய மொழிகளில் 70 சொற்கள் ஆங்கில வார்த்தைகளாக இடம் பெற்றுள்ளன. சகோதரனை குறிக்கும் 'அண்ணா' என்ற வார்த்தை புதியதாக ஆங்கில அகராதியில் எடுத்தாளப்பட்டுள்ளது. ஏற்கனவே நாணயத்தை குறிக்கும் 'அணா' சொல் இடம் பெற்றிருந்தது. அதேபோல் தமிழ் சொல்லான 'அப்பா' ஆங்கிலத்தில் அதே அர்த்தத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. 'அச்சா' என்ற ஹிந்தி வார்த்தை சந்தேகம், கேள்வி, வியப்பு, ஆச்சர்யம், சம்மதம், மகிழ்ச்சி என பன்முக சொல்லாக ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது.