தமிழ் வேட்டை புதிய தலைமுறை
தமிழ்நாடு

தமிழ் அநிதமும், வாணி பிழைதிருத்தியும் இணைந்து நடத்தும் ‘தமிழ் வேட்டை’ - விளையாட ‘நீங்கள் தயாரா?’

தமிழ் அநிதமும் வாணி பிழைதிருத்தியும் இணைந்து ‘தமிழ் வேட்டை’ என்ற பிழைகளை வேட்டையாடும் போட்டியை ஐப்பசி மாதம் முழுவதும் நடத்தவுள்ளனர்.

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழ் அநிதமும் வாணி பிழைதிருத்தியும் இணைந்து ’தமிழ் வேட்டை’ என்ற பிழைகளை வேட்டையாடும் போட்டியை ஐப்பசி மாதம் முழுவதும் நடத்தவுள்ளனர்.

மனிதன் தன் உளக்கருத்துக்களை பிறர்க்கு உணர்த்தப்பயன்படும் கருவியே மொழி.. அப்படிப்பட்ட மொழியானது, மக்களின் நாகரீகம், கலாச்சாரம், பண்பாடு, வழக்குகள் இவற்றை தன்னக்கத்தே கொண்டு அதை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் ஒரு தலையாய பணியை செய்கிறது.

இந்தவகையில், தொன்மைத்தன்மையுடன் செம்மொழியாக உயர்ந்து நிற்கும் தமிழ்மொழியை பிழையில்லாமல் பயன்படுத்தும் பொருட்டும், தமிழ்மொழியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் பொருட்டும், தமிழ் அநிதமும் வாணி பிழைதிருத்தியும் இணைந்து பிழைகளை வேட்டையாடும் ’தமிழ் வேட்டை’ என்ற போட்டியை நடத்தவுள்ளனர்.

தமிழ் வேட்டை

இணையவழியில் நடக்கவுள்ள இந்த போட்டியில், போட்டியாளர்கள் நீங்கள் தினமும் வாசிக்கும் செய்தித்தாள்கள், செய்தித்தளங்கள், பார்க்கும் தொலைக்காட்சிகள், வலையொளிகள், அமைப்புகளின் செய்தி அறிக்கைகள், சுவரொட்டிகள், அறிவிப்புப் பலகைகள் என்று தமிழில் எழுதப்பட்டுள்ள எல்லா இடங்களிலும் ஏதேனும் எழுத்துப்பிழை தெரிந்தால் அதை அடையாளம் கண்டு, அதை #tamilvettai என்ற கொத்துக்குறியில் சுட்டிக்காட்டி திருத்திய வடிவத்தையும் குறிப்பிட வேண்டும்.

எப்பொழுது நடைபெறுகிறது?

பிழையின்றித் தமிழை எழுத விரும்பும் ஒவ்வொருவருக்கும் நல்லதொரு வாய்ப்பாக அமையவிருக்கும் இப்போட்டி, ஐப்பசி மாதம் முழுக்க, அதாவது அக்டோபர் 18 - நவம்பர் 15 வரை நடைபெறவுள்ளது.

பரிசுத்தொகை

பரிசுத்தொகையாக, வெற்றி பெறும் முதல் மூன்று நபர்களுக்கு முறையே 5000, 3000, 2000 ரூபாய் ரொக்கப் பரிசும், ஆறுதல் பரிசாக ஐந்து நபர்களுக்குத் தலா 2000 மதிப்புள்ள பரிசுச் சீட்டும் வழங்கப்படும்.

வளர்ந்து வரும் தலைமுறைகளிடையே தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும், அவர்களும் தமிழ் மொழியை திறம்பட எழுத ஒரு தூண்டுகோளாகவும் அமைய இருக்கும் இந்தப் போட்டியின் விதிமுறைகளை https://vaanieditor.com/contest என்ற இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம்.

இந்த முன்னெடுப்புக்கான நோக்கம் என்ன? என்பது போன்ற சில தகவல்களை, இப்போட்டியை ஒருங்கிணைப்பவர்களில் ஒருவரான நீச்சல்காரன் ராஜா என்பவரிடத்தில் கேட்டறிந்தோம்...

அவர், பல சுவாரஸ்சிய தகவல்களை நம்மோடு பகிர்ந்துள்ளார் அவர். அவற்றை பார்க்கலாம்.

நீச்சல்காரன்

போட்டியின் நோக்கம்:

“ஆங்கிலத்தில் பிழை விடும் போது ஏற்படும் தயக்கம் தமிழில் இருப்பதில்லை. யாரும் அதைத் தட்டிக் கேட்கவோ சுட்டிக் காட்டவோ செய்வதில்லை. அந்த நிலை மாறவும் தமிழில் பிழையோடு எழுதினால் மக்கள் சுட்டிக் காட்டுவார்கள் என்ற பொறுப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தப் போட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முதன்மை நோக்கமென்றால் கண்ணில்படும் தமிழ்ப் பிழைகளை வேட்டையாடி அழிக்க வேண்டும், பிழையில்லாமல் தமிழை எழுத வைக்க வேண்டும் ஆகியவையே.

திடீர் முன்னெடுப்புக்கான காரணம் என்ன?

பல காலமாக சில நண்பர்களுடன் இணையத்தில் நாங்கள் பிழைகளைச் சுட்டிக் காட்டி வந்திருக்கிறோம். இப்போது அதை அனைவரும் செய்ய ஒரு களம் ஏற்படுத்துகிறோம். இது திடீர் முன்னெடுப்பு என்பதைவிடத் திட்டமிட்ட முன்னெடுப்பே. இணையத்தில் மக்கள் விடும் லட்சக்ககணக்கான எழுத்துப்பிழைகளை அலசி, அதில் அதிகம் விடும் பிழைகளைச் சுட்டிக் காட்டி ’நற்றமிழ்பழகு’ என்ற இலக்கணத் தொடரை இணையத்தில் பகிர்ந்து வந்தேன். அது நூறு நாள் கடந்துள்ளதைக் கொண்டாடும் விதமாக இப்போது அறிமுகமாகியுள்ளது.

வெற்றியாளர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

இப்போட்டியில் நாங்கள் கேள்விகளைக் கேட்பதில்லை. எனவே சரியான விடை என்று பார்க்க வேண்டியதில்லை. மக்களாகவே தங்கள் கண்ணில் படும் பிழைகளைச் சுட்டிக் காட்டி, #tamilvettai என்ற கொத்துக்குறியில் (அதாவது Hashtag-ல்) பதிவு செய்வார்கள். அது சரியான திருத்தமென்றால் அந்த நபருக்கு ஒரு புள்ளி. அதிகமாகப் பிழைகளைச் சுட்டிக் காட்டுபவர்கள், ஆழமான பிழைகளைச் சுட்டிக் காட்டுபவர்கள் மற்றும் அதிகக் கவனம் பெற்ற திருத்தங்களுக்கு முன்னுரிமை உண்டு. அதை நடுவர்கள் குழு தீர்மானிக்கும்.

பிழையில்லா தமிழ்... இவ்வளவு அக்கறை வந்ததன் காரணம்

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரையில் "நிறைய பிழை இருக்கு" என்று ஒருவர் சுட்டிக் காட்டினார். அதுதான் திருப்புமுனை. இனி அந்த மாதிரி பிழை விடக் கூடாது என்று "நாவி" என்ற சிறிய பிழைதிருத்தியை எனக்காக உருவாக்கினேன். பின்னர் பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் வெளியிட்டேன். அன்றிலிருந்து இன்றுவரை அதை பலர் பயன்படுத்துவதாலும் ஊக்கப்படுத்துவதாலுமே தொடர்ந்து மொழி சார்ந்த வெவ்வேறு கருவிகளை உருவாக்கும் முனைப்பு வந்தது.

எதிர்கால இலக்கு

நாவி (சந்திப்பிழை திருத்தி), வாணி (எழுத்துப்பிழை திருத்தி) ஆகியவற்றிற்கு அடுத்து "தமிழிணைய பிழைதிருத்தி" என்ற விண்டோஸ் செயலியை உருவாக்கினேன். அதை முன்னாள் முதலமைச்சர் 2018 இல் வெளியிட்டார். ஆங்கிலத்திற்கு ’கிராமர்லி’ என்ற செயலி போலத் தமிழுக்கு ’வாணி திருத்தி’யை மேம்படுத்தி வருகிறேன்.

வாணி

எந்த இணையதளத்திலிருந்தும் பிழை சோதனையை வாணி வழியாகச் செய்யமுடியும். இணையத்தில் மக்கள் விடும் லட்சக்கணக்கான எழுத்துப் பிழைகளைச் சேகரித்து அதிலிருந்து முக்கியப் பிழைகளைத் தொகுத்து ’நற்றமிழ்பழகு’ என்ற செய்தித் தொடர் எழுதிவருகிறேன். இலக்கணத்தை மாணவர்கள் கற்றுக் கொள்ள உரையாடி (chatbot) உருவாக்கியுள்ளேன்.

codemix எனப்படும் ஆங்கில எழுத்தில் தமிழை எழுதுபவர்களுக்கான தமிழ் மாற்றியை உருவாக்க முயன்று வருகிறேன். கட்டற்ற மென்பொருள்களை செயற்கை நுண்ணறிவுத் துறையில் தமிழுக்கு உருவாக்க வேண்டும் என்பதெல்லாம் எதிர்கால இலக்குகள்” என்றார்.