தமிழ்நாடு

தமிழறிஞர் மா.நன்னன் காலமானார்

தமிழறிஞர் மா.நன்னன் காலமானார்

webteam

தமிழறிஞர் மா.நன்னன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 94. 

தமிழகத்தின் சிறந்த தமிழறிஞர்களில் ஒருவர் மா.நன்னன். சிறந்த எழுத்தாளரான இவர், சென்னை சைதாப்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். முதுமை காரணமாக இன்று காலை அவர் காலமானார். 

மறைந்த மா. நன்னன், விருத்தாசலத்தை அடுத்த சாத்துக்குடல் எனும் ஊரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருஞானசம்பந்தன். தமிழ்ப்பற்று காரணமாக பெயரை நன்னன் என மாற்றிக்கொண்டார். தொடக்கப்பள்ளி ஆசிரியராகத் தமிழ்ப் பணியைத் தொடங்கிய அவர், தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார். தொல்காப்பியப் பேராசிரியர் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். உயர்நிலைப் பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக்கல்லூரி, மாநிலக் கல்லூரிகளில் பணியாற்றியுள்ளார். தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராகவும் பணியாற்றிய இவர், எழுத்தறிவித்தலில் ‘நன்னன் முறை’ என்ற புதிய முறையை உருவாக்கியவர். 
‘உரைநடையா? குறைநடையா?’, ‘எல்லார்க்கும் தமிழ்’, ‘தவறின்றி தமிழ் எழுதுவோம்’, ‘வாழ்வியல் கட்டுரைகள்’, ‘தமிழ் எழுத்தறிவோம்’, ‘கல்விக்கழகு கசடற எழுதுதல்’ உட்பட சுமார் 70 நூல்களை எழுதியுள்ளார். பெரியாரின் கொள்கைகளில் பற்று கொண்டிருந்த அவர், அது பற்றியும் பல நூல்கள் எழுதியுள்ளார்.

மா.நன்னன் மறைவுக்கு ஏராளமான தமிழறிஞர்கள், அரசியல்வாதிகள் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.