தமிழ்நாடு

பிரபஞ்சன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்

rajakannan

புதுவையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன். இவருக்கு வயது 73. 100-க்கும் மேற்பட்ட படைப்புகளை கொடுத்துள்ள இவர், ‘வானம் வசப்படும்’ என்ற நாவலுக்காக மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளார். இதுதவிர தமிழக மற்றும் புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருது உள்பட ஏகப்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் புதுச்சேரி மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 2 மாத காலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவரின் உயிர் பிரிந்தது. பிரபஞ்சனின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பிரபஞ்சனின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று அவர் கூறியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தனித்துவமான தமிழ் நடையால் பல படைப்புகளை வழங்கி வாசிப்பு நிலையை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றவர்” என்று கூறியுள்ளார்.

“தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒருபாணியை உருவாக்கி தனித்துவமாக திகழ்ந்த எழுந்தாளர் பிரபஞ்சன். அவரது மறைவு தமிழ் எழுத்துலகுக்கு பேரிழப்பாகும்” என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், தமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் பிரபஞ்சன் என்று இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர்  பாரிவேந்தர் கூறியுள்ளார். தமிழ் இலக்கிய உலகின் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவராக விளங்கியவர் பிரபஞ்சன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

சமரசம் இல்லாத படைப்பாளியான பிரபஞ்சனின் நாவல்களில் பெண்ணியம் சற்று தூக்கலாக இருக்கும் என்று கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.