தமிழ்நாடு

“என்னை பார்க்காமல், உங்க வேலையைப் பாருங்க” - வானிலை மைய அதிகாரியை சாடிய வெதர்மேன்

“என்னை பார்க்காமல், உங்க வேலையைப் பாருங்க” - வானிலை மைய அதிகாரியை சாடிய வெதர்மேன்

webteam

வானிலை மைய அதிகாரிகள் தன்னை கவனிக்காமல் வேலையை கவனியுங்கள் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சாடியுள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஒரு வானிலை அதிகாரி நான் சிவப்பு தக்காளி எனப் பயன்படுத்தியதை விமர்சித்திருக்கிறார். என்ன உணர்வு இது. எனக்கு கடந்த இரண்டு மாதத்தில் பல்வேறு ஊடகங்களில் இருந்து 200-300 போன்கள் வந்துள்ளன. ஆனால் நான் எதிலும் பங்கேற்கவில்லை. நான் தனியாக செயல்பட நினைக்கிறேன். எனது உடல்நலம், அமைதி, குடும்பத்துடன் செலவிடும் நேரம் மற்றும் பலவற்றை நான் இழந்துவிட்டேன். நீங்கள் என்னை மதிப்பீடு செய்தவற்கு முன்னர், உங்களுக்கு என்னைப் பற்றி தெரியுமா ? மற்றவர்களை பார்ப்பதை நிறுத்திவிட்டு, உங்கள் வேலையை பாருங்கள்.

நான் வானிலை மையத்தின் வேலைகளில் குறுக்கிடுவது இல்லை. நான் கடந்த இரண்டு வருடத்தில் உங்கள் மையத்தின் தகவல் தவறு என்று எங்கேயும் கூறியதில்லை. எனது பேட்டிகளில் கூட நான் வானிலை மையத்திற்கு ஆதரவாக கூறியிருக்கிறேன். ஆனால் எனது ஃபேஸ்புக் பக்கத்தில் என்ன போடனும், போடக்கூடாது என சொல்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை. இந்த பக்கத்தை பயன்படுத்தும் வரை எனது சொந்த முறையில், சுதந்திரமாக பதிவிடுவேன். 

நான் தவறுகளை குறிப்பிட நினைத்தால், உங்கள் மையத்தின் தகவலில் 100 தவறுகளை குறிப்பிட முடியும்” என்று கூறியுள்ளார். மேலும், தான் மக்களுக்கு எந்த வித அச்சத்தையும் ஏற்படுத்துவதில்லை என்றும், வானிலை மையத்தின் வேலையில் தலையிடுவதில்லை என்றும், எனவே உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் செப்டம்பர் மாதம் தொடர்பான வானிலை மற்றும் மழைப்பொழிவு தகவல்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.