சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரதர் கான சபாவில் தனியார் அமைப்பு சார்பில் இலக்கிய திருவிழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் "பாரதியாரின் கவிதைகளும் அறிவியலும்" என்ற தலைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் எழுத்தாளர் அரவிந்த் நீலகண்டன் ஆகியோரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துரையாடி பேசிய அண்ணாமலை, ”மகாகவி பாரதி எழுதிய கவிதைகளில் அறிவியல் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. பிரபஞ்சம் குறித்து ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பேசுவதற்கு முன்பே பாரதியார் தனது பாடல்களில் சக்தி குறித்து பேசியுள்ளார். மதசார்பற்ற என்ற கருத்தை சொல்லி, ஆன்மிகம் பாட புத்தகத்தில் இருந்து நீக்கிவிட்டனர். இதனால் பாரதியாரின் பல பாடல்கள் பாட புத்தகத்தில் சொல்லிக் கொடுக்கப்படவில்லை. நம் சுற்றுப்புறத்தை பற்றி படிப்பது இல்லை. நம்மை சுற்றி உள்ள தாவரங்கள் பற்றி தெரியவில்லை. வேறு எங்கோ உள்ளவற்றை படிக்கும் வகையில் தான் தற்போது பாட திட்டம் உள்ளது. ஆனால், நாம் நம்மை பற்றி படிக்க வேண்டும். நம் மூலிகைகள் குறித்து படிக்க வேண்டும். இதற்காகத்தான் புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்படுகிறது. தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கர்நாடகம் மாநிலம் தான் புதிய கல்வி கொள்கையை முதன் முதலில் அறிமுகப்படுத்திய மாநிலம். புதிய கல்வி கொள்கையில் 5ஆவது வரை அனைத்து பாடங்களும் தாய்மொழியில் இருக்கும். அதில் நமக்கான பாடங்களாக இருக்கும்.
எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டில் புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்தி ஆக வேண்டும். இது காலத்தின் கட்டாயம். புதிய கல்வி கொள்கை அமல்படுத்துவது தமிழ்நாட்டில் ஈகோ பிரச்னையாக பார்க்கிறார்கள். பாரதி குறித்து பிரதமருக்கு முழுமையாக தெரிந்த அளவுக்கு கூட தமிழ்நாட்டில் உள்ள பல தலைவர்களுக்கு தெரிவதில்லை. தமிழ்நாட்டில் 250 ஆண்டுகால வரலாற்றில் இடம் பெறாத மறைக்கப்பட்ட எல்லா விஷயங்களையும் பற்றி ஒரு புத்தகம் எழுத வேண்டும். அந்த புத்தகம் எழுதுவதற்கு நான் உதவி செய்வேன். அப்படி அந்த புத்தகத்தில் தலைவர்கள், கல்வி திட்டம், வாழ்வியல், தொழில் உள்ளிட்டவை குறித்து எழுதப்பட வேண்டும்.
காசி தமிழ் சங்கமம், பனாரஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள மகாகவி பாரதி இருக்கை சார்பில் நடத்தப்பட்டது. பாரதியார் குறித்து இந்தியா முழுவதும் கற்றுக்கொள்ள அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியாருக்கு இருக்கை இருப்பது பெருமையானது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களில் பாரதியார் இருக்கை இருந்திருக்க வேண்டும். தாய்மொழியில் கற்றல் அறிவு குறைவாக உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் கல்வி திட்டத்தை சீர்படுத்த முடியாது. இந்த நிலையை மாற்ற வேண்டும். தற்போது உள்ள கல்வி திட்டத்தை அழித்துவிட்டு, தலைகீழாக மாற்ற வேண்டும்.
பணம் இருப்பவர்களுக்கும், பணம் இல்லாதவர்களுக்கும் ஒரேவிதமான கல்வி கிடைப்பதில்லை. பெரும் வேறுபாடு தமிழ்நாட்டில் உள்ளது. ஏழைகளுக்கு அரசுப் பள்ளி என்ற நிலை உள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி குழந்தையை சினிமா பாட்டுக்கு ஆட வைக்கிறார்கள். அந்த வீடியோவை ட்விட்டரில் கல்வித்துறை அமைச்சர் போடுகின்றார். அந்த அளவுக்கு தான் தமிழகத்தில் கல்வி உள்ளது. புதிய கல்வி திட்டம் குறித்து பேச இங்கு உள்ளவர்களுக்கு தகுதி இல்லை. சினிமா பட ரிலிஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் அமைச்சர் தான் கல்வித் துறைக்கு உள்ளார். தவறான ஆட்கள் கையில் கல்வி துறை சிக்கியுள்ளது.
இந்தியா முழுவதும் ஒரே தேர்வு நடத்தப்படும் நிலையில், அதற்கு தகுதி பெறும் அளவில் தமிழ்நாட்டில் கல்வி இல்லை. ஒடிசா குழந்தை தைரியமாக நீட் எழுதுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் அச்சத்துடன் எழுத போகிறார்கள். இங்கு அதுபோன்று பயத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.