தமிழ்நாடு

உடான் சேவை: சேலம் உட்பட சிறு நகரங்களுக்கிடையே விமான சேவை

webteam

இந்தியாவில் சாமானியர்களும் விமானப் பயணத்தை மேற்கொள்ளும் வகையில் உடான் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவின் சிறு நகரங்களுக்கிடையே விமான சேவை கொண்டு வருவதே உடான் திட்டத்தின் சிறப்பாகும். 

இந்தியாவில் சிறு நகரங்களுக்கு இடையில் குறைந்த கட்டணத்தில் விமான போக்குவரத்தை ஏற்படுத்துவதே உடான் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் ஒரு மணி நேரத்திற்குட்பட்ட அல்லது 500 கிலோமீட்டர் தொலைவுக்குட்பட்ட விமான பயணங்களுக்கு அதிகபட்ச கட்டணமாக 2500 ரூபாய் வசூலிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் நாடெங்கும் உள்ள 70 விமான நிலையங்களுக்கு இடையே 5 விமான நிறுவனங்கள் சேவையைத் தரும். இந்த விமானங்களில் 50 சதவீத இருக்கைகள் உடான் சேவையின் கீழ் குறைந்த கட்டணம் கொண்டதாக இருக்கும். இதனால் விமான நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு தர உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சென்னை, சேலம், ஓசூர், நெய்வேலி ஆகிய நகரங்களும், புதுச்சேரியும் குறைந்த கட்டண போக்குவரத்து கட்டமைப்பில் இணைய உள்ளன. புதுச்சேரி - சென்னை, புதுச்சேரி - சேலம், நெய்வேலி - சென்னை இடையே விமான சேவையை தரும் வாய்ப்பை ஏர் ஒதிஷா நிறுவனம் பெற்றுள்ளது. சேலத்திலிருந்து புதுச்சேரி மற்றும் பெங்களூருக்கும் குறைந்த கட்டண விமான சேவையை அளிக்கும் வாய்ப்பை ஏர் ஒதிஷா பெற்றுள்ளது. சேலத்திலிருந்து சென்னைக்கு சேவையை தரும் வாய்ப்பு ட்ரூஜெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இச்சேவைகள் அனைத்தும் செப்டம்பர் மாத வாக்கில் தொடங்கும் எனத் தெரிகிறது. ஓசூர் - சென்னைக்கு இடையே விமான சேவை தர ட்ரூ ஜெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் பெறப்படவேண்டியுள்ளது.