தமிழ்நாடு

டெங்குவால் உயிரிழந்தோர் விவரம் 4 நாட்களில் அறிவிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர்

webteam


தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்கள் 4 நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது மற்றும் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அதில் ஆலோசிக்கப்பட்டது. மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட சில்லறை வர்த்தக மருந்தக‌ங்களில், கடை முகப்பிலேயே டெங்கு விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும் என்றும், மருத்துவர் பரிந்துரை சீட்டுக்கு மட்டுமே மருந்து தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இறுதியாக அனைத்து மாவட்ட மருந்து வணிகர் சங்க நிர்வாகிகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெங்கு குறித்த பதாகைகளை வழங்கினார்கள், அதை தொடர்ந்து டெங்கு ஒழிப்பு உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், இன்னும் நான்கு நாட்களில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.