தமிழ்நாடு

மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் - 2ஆம் இடத்தில் தமிழகம்

webteam

மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அதிக நிதியுதவி பெற்ற மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஏழை மக்களுக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்தியது. தமிழகத்தில் இந்த திட்டமானது முதலமைச்சர் மருத்துவர் காப்பீடு திட்டத்துடன் இணைத்து செயல்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் செயல்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. 

இத்திட்டத்தின் கீழ் இதுவரை 3 ஆயிரத்து 77 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் தேசிய அளவில் 641 கோடி ரூபாய் நிதியுதவி பெற்று குஜராத் முதலிடத்தில் உள்ளது. 399 கோடி ரூபாய் நிதியுதவி பெற்று தமிழகம் இரண்டாமிடத்தை பிடித்துள்ளது. 2 லட்சத்து 11 ஆயிரத்து 75 பேர் இந்த காப்பீட்டின் கீழ் நிதியுதவி பெற்றுள்ளனர். நிதியுதவி பெற்றவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழகம் 4ஆவது இடத்தில் உள்ளது. 

முதலமைச்சர் காப்பீடு திட்டமும் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டமும் இணைந்து செயல்படுவதால் மற்ற மாநிலங்களில் வழங்கப்படாத பல முக்கியமான சிகிச்சைகளும் தமிழகத்தில் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன.