தமிழ்நாடு

ஜிஎஸ்டி வரையரைக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவர தமிழகம் எதிர்ப்பு

ஜிஎஸ்டி வரையரைக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவர தமிழகம் எதிர்ப்பு

kaleelrahman

பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது

லக்னோவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் கலந்து கொள்ள இயலாத நிலையில் அவரது உரை சமர்ப்பிக்கப்பட்டது. ஏற்கனவே கலால் வரி, மேல் வரி விதிப்புகளில் செய்யப்பட்ட மாற்றத்தால் மத்திய அரசின் வருமானம் லட்சக்கணக்கான கோடிகள் அதிகரித்துள்ள நிலையில், மாநிலங்கள் பெரிய அளவில் வருவாய் இழப்பை சந்திப்பதாக நிதியமைச்சர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவது மாநிலங்களுக்கு மிகப்பெரிய வரி வருவாய் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் பெரும் அநீதியாகவும் அமையும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்திருந்தார். எனினும் பெட்ரோல், டீசலுக்கான மேல் வரிகளை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்யும் பட்சத்தில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது குறித்த தங்கள் கருத்தை மறு பரிசீலனை செய்ய தயாராக இருப்பதாகவும் தமிழக நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டருக்கு மேற்பட்ட பாட்டிலுக்கு 5 சதவிகித வரியும் ஒரு லிட்டருக்கு கீழான பாட்டிலுக்கு 18 சதவிகித வரியும் விதிக்க அளிக்கப்பட்டுள்ள பரிந்துரையை ஏற்கக் கூடாது என்றும் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார். இது தவிர ஜிஎஸ்டி நடைமுறைகளை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கொண்டு வருதல், ஒட்டுமொத்த வரி விதிப்பு நடைமுறைகளையும் மாற்றி அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்வைத்துள்ளார்