மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஐ.ஜி.எஸ்.டி. தொகை 4 ஆயிரத்து 459 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டுமென்று 33ஆவது சரக்கு மற்றும் சேவை வரி கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகம் சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். லேத் பட்டறைகள் மற்றும் சிறு சிறு இயந்திர பாகங்கள் தொடர்பான சில்லரை வேலைகள் மீதான வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டுமென ஜி.எஸ்.டி. கவுன்சிலிடம் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்தார்.
கை மற்றும் இயந்திரத்தால் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகளுக்கு ஓரே சீராக 12 சதவீதம் வரி விதிக்க வேண்டுமென்று கோரப்பட்டது. இதே போல், கைத்தறிப் பொருள்கள், கொள்கலனில் அடைக்கப்பட்டு வணிகச் சின்னமிடப்பட்ட அரிசி, ஊறுகாய், வெண்ணெய், நெய், விவசாயக் கருவிகள், பேக்கரிப் பொருள்கள், குளிர்பானங்கள், காய்ந்த மிளகாய், வெந்தயம், தனியா, காதிப்பொருள்கள், பவானி தரைவிரிப்பு, கொசு அழிப்பான்கள், நன்னாரி சர்பத், வறுத்த கடலை, உள்ளிட்ட பல்வேறு பொருள்கள், விவசாய நடவடிக்கைகள் தொடர்பான சேவைகள், மாநில மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றுக்கு வரிவிலக்கு அளிக்கும்படி ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.