தமிழ்நாடு

மதுரை இராஜாஜி மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு மார்பக சிகிச்சை வசதி: முழு விவரம்

மதுரை இராஜாஜி மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு மார்பக சிகிச்சை வசதி: முழு விவரம்

நிவேதா ஜெகராஜா

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில், இன்னும் ஒரு மாதத்தில் திருநங்கைகளுக்கு மார்பகம் பொருத்தும் சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும், கடந்த 8 மாதத்தில் 207 மூன்றாம் பாலினத்தவருக்கு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் தமிழகத்தின் முக்கிய மருத்துவமனையாக கருதப்படும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான பன்னோக்கு உயர்சிகிச்சை மருத்துவ பிரிவு கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் தொடங்கப்பட்டு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான திருநங்கைகளுக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் இந்த சிறப்பு வார்டு வியாழக்கிழமை தோறும் காலை 10 மணி முதல் 12 மணி வரை மட்டுமே இயங்குகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் தற்போது வரை கடந்த எட்டு மாதத்தில் மட்டும் 207 மூன்றாம் பாலினத்தவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அதில் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய 40 திருநம்பிகளுக்கு டெஸ்டோஸ்டிரன் ஹார்மோன் சிகிச்சையும், தமிழகத்தில் முதன்முறையாக இரண்டு திருநம்பிகளுக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 10 திருநம்பிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், தமிழகத்தின் உள்ள அரசு மருத்துவமனைகளில் அதிகளவு சிகிச்சைகளும், அறுவை சிகிச்சைகளும் மதுரை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வெளிமாநிலங்களுக்கு திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் சென்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நிலையில், தமிழகத்தில் உள்ள திருநங்கைகள், திருநம்பிகள் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து மதுரைஅரசு இராஜாஜி மருத்துவமனைக்கு வருகை தந்து சிகிச்சை எடுத்துக்கொள்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அரசு இராஜாஜி மருத்துவமனையில் ஒரு மாதத்தில் திருநங்கைகளுக்கு செயற்கை மார்பகம் பொருத்தும் சிகிச்சை தொடங்க உள்ளதாக அகச்சுரப்பியல் மருத்துவத் துறை தலைவர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான வரப்பிரசாதமாக மதுரை அரசு மருதுவமனை மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.