கர்நாடகா லாரி புதிய தலைமுறை
தமிழ்நாடு

“கர்நாடகாவுக்கு இன்று லாரிகள் இயக்கவேண்டாம்” - தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவுறுத்தல்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவிற்கு லாரிகளை இயக்கவேண்டாம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவுறுத்தல். வடமாநிலங்களுக்கு சென்று திரும்பும் லாரிகளை ஆங்காங்கே நிறுத்தி வைக்கவும் அறிவுரை.

PT WEB

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக, இன்று கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு நடைபெறுவதால் தமிழகத்திலிருந்து கர்நாடகா வழியாக செல்லும் லாரிகளை இயக்க வேண்டாம் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இதனிடையே நேற்று பெங்களூருவில் நைஸ் சாலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து லாரிகள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் தனராஜ், “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செப் 26 அன்று கர்நாடகா வழியாக வட மாநிலங்களுக்கு இயக்கப்படும் லாரிகள் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு செல்லக்கூடிய லாரிகளை இயக்க வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் “வடமாநிலங்களுக்கு சென்று திரும்பும் லாரிகளை ஆங்காங்கே பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும். லாரி என்பது அனைவருக்குமான பொதுப்போக்குவரத்து என்ற அடிப்படையில் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த லாரிகள் மற்றும் லாரி ஓட்டுநர்களை மீதான விரும்பத்தகாத தாக்குதல்களை நடத்தக்கூடாது. சகோதரத்துவத்தோடு அணுக வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

டிப்பர் லாரி

தமிழகத்தை சேர்ந்த லாரி மற்றும் லாரி ஓட்டுநர்களுக்கு கர்நாடக அரசு உரிய பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.