தமிழ்நாடு

வேதா இல்ல விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்

வேதா இல்ல விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்

JustinDurai
ஜெயலலிதாவின் வேதா நிலைய விவகாரத்தில் அட்வகேட் ஜெனரலிடம் ஆலோசனை கேட்டு அடுத்தக் கட்ட முடிவு எடுக்கப்படும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ''சிறைக் கைதிகளுக்கும் தரமான மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டு திறக்கப்பட்டுள்ளது. ஜெயலிதாவின் வேதா நிலையம் அரசுடமையாக்கப்பட்டது செல்லாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து இவ்வழக்கில் ஆஜரான அட்வகேட் ஜெனரலின் ஆலோசனையைப் பெற்று அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை சிறைச் சாலையில் ஊழல் புகார் குறித்து தொடுக்கப்பட்ட வழக்கிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிபதி கூறியதால் வழக்கைத் தொடுத்தவர்களே அதனை வாபஸ் பெற்று உள்ளனர். முழுமையான விபரங்களை கொடுத்தால் அதன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். எங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடு என்பது எல்லாருக்கும் தெரியும். எனவே முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பில்லை. அப்படி இருந்தால் லஞ்ச ஒழிப்புத் துறை உரிய நடவடிக்கை எடுக்கும். சிறைச்சாலைகளில் மத்திய மாநில அரசுகளின் தணிக்கை குழு மூலம் ஆய்வு நடத்தப்பட்டுதான் வருகிறது, தவறு செய்யும் இளம் சிறார்களை திருத்த இயன்ற அளவு சிறார் சீர்திருத்த பள்ளிகளில் சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பிச் செல்லும் சிறுவர்களை கண்டுபிடித்து விடுகிறோம். அவர்கள் தப்பிச் செல்லாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.