உள்ளாட்சி தேர்தல் குறித்த தமிழக அரசின் அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. ஆனால் உள்ளாட்சிகளில் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என்று திமுக வழக்கு தொடர்ந்ததை அடுத்து, தேர்தலை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று திமுக மனு செய்ததை அடுத்து, மே 14ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் வாக்காளர் பட்டியல் தயாராகவில்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டதால், தேர்தல் தள்ளிப்போனது. இந்நிலையில் இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த போது, நவம்பர் 17ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும், அதற்கான தேர்தல் அட்டவணையை செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று அதற்கு கடைசி நாள் என்பதால், தமிழக அரசு சார்பில் அட்டவணை வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.