தமிழ்நாடு

'அரசியல் பேசாதீங்க, கஞ்சாவை கட்டுப்படுத்துங்க' - தமிழக அரசுக்கு எல். முருகன் வேண்டுகோள்!

'அரசியல் பேசாதீங்க, கஞ்சாவை கட்டுப்படுத்துங்க' - தமிழக அரசுக்கு எல். முருகன் வேண்டுகோள்!

webteam

வீணான அரசியலை தவிர்த்துவிட்டு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை ஒடுக்க தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை அறவே ஒழிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருந்தார். இந்தச் சூழலில், தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்ததற்கு மத்திய அரசே காரணம் என அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டி இருந்தார். மேலும், குஜராத் துறைமுகம் வழியாகவே, தமிழகத்திற்குள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் நுழைவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த விநாயகர் விசர்ஜன நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், போதைப் பொருள் தொடர்பான பொன்முடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசினார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை மாநில அரசுக்கே இருப்பதாக தெரிவித்தார். மேலும் கஞ்சா போதைப்பொருள் விவகாரத்தில் வீணான அரசியல் செய்வதை தவிர்த்துவிட்டு, அதிகரித்து வரும் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க மாநில அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் தவறான பாதைக்கு செல்லும் இளைஞர்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.