தமிழ்நாடு

பாஜகவின் வேல் யாத்திரையை தடை செய்யவேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

பாஜகவின் வேல் யாத்திரையை தடை செய்யவேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

sharpana

சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை ’வெற்றிவேல் யாத்திரை’ நடத்தப்படும் என்று அறிவித்தார். இந்த யாத்திரை வரும் நவம்பர் 6 ஆம் தேதி தொடங்கி டிசம்பர்  6 ஆம் தேதி முடியும் என்று தெரிவித்ததோடு ’வெற்றிவேல் யாத்திரை வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்’ என்று அறிவித்தார். அதற்கான, பிரச்சார பாடலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த யாத்திரையில் தமிழக பாஜக தலைவர்கள் மட்டுமல்லாமல் தேசிய தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். இறுதிநாளன்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா கலந்துகொள்ளவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த யாத்திரைக் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருணன் ”தமிழகத்தில் பாஜக தங்கள் கலவர அரசியலை மறைத்து மக்களை ஏமாற்றவே 'வேல் யாத்திரை' என பெயரிட்டு இருக்கிறார்கள்.

 பாஜக நாடு முழுவதும் நடத்தியிருக்கும் யாத்திரைகளைத் தொடர்ச்சியாக கவனித்து வரும் எவருக்கும் அவர்களின் நோக்கம் பளிச்சென்று விளங்கும். இந்தியா முழுமைக்கும் அவர்கள் யாத்திரை நடத்துகிறபோது வழி நெடுக இந்திய மக்களின் குருதியும் சதைகளும் கொட்டிக்கிடந்ததை வரலாறு பதிவு செய்திருக்கிறது.


தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு அவர்களே குண்டு வைத்தது, திருப்பூரில் தன் சொந்த கட்சிக்காரரின் தற்கொலையை அரசியல் மற்றும் மத அடிப்படையிலான கொலை என்று விளம்பரம் செய்து கலவரம் செய்ய முயற்சித்தது, ராமநாதபுரத்தில் தனி நபர்களுக்கு இடையிலான மோதலை மதமோதலாக சித்தரித்து வன்முறையை தூண்ட முயற்சித்தது, பாஜகவின் சில நிர்வாகிகளே தங்கள் வீட்டில் குண்டு எறிந்து சிறுபான்மை மக்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து எனவே போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கோரியது என இவர்களுடைய வரலாறு முழுவதும் வன்முறையைத் தூண்டுவதும், அந்தப் பழியை இதர இயக்கங்கள் மீது திணிப்பதுமாகவே இருந்து வந்திருக்கிறது.

இது ஒருபுறமிருக்க கொரோனா காலத்தில் 100 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தின் வட மூலையிலிருந்து தென் மூலை வரை கட்டுப்பாடுகள் இருக்கும் இந்தக் காலத்தில் யாத்திரை நடத்த அனுமதிப்பது அவர்களின் விஷம் கலந்த பிரச்சாரத்தை பரப்புவதோடு கொடிய நோயையும் பரப்புவதற்கு ஏதுவாக அமைந்துவிடும்.
எனவே, நோய்ப் பேரிடர் காலத்தின் கட்டுப்பாடுகளை மீறி, கலவர அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் இந்த 'வேல் யாத்திரைக்கு' தடைவிதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.