தமிழ்நாடு

உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் பதவிக்கான விதிகள் : தமிழக அரசு வெளியீடு

உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் பதவிக்கான விதிகள் : தமிழக அரசு வெளியீடு

webteam

சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் பதவிக்கான 2020ஆம் ஆண்டின் விதிகளை தமிழக அரசு வெளியிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரை அங்கீகரிப்பதற்கு புதிதாக நிரந்தரக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி தலைமையிலான இந்தக் குழுவில், இரு மூத்த நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர், ஒரு மூத்த வழக்கறிஞர் ஆகியோர் இடம்பெறுவார்கள். இந்த குழு ஏற்றுக்கொள்ளும் விண்ணப்பங்களை மட்டுமே அனைத்து நீதிபதிகள் அடங்கிய குழுவில் சமர்ப்பித்து, சம்பந்தபட்ட வழக்கறிஞரை மூத்த வழக்கறிஞராக தேர்வு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும். பழைய நடைமுறையில் மூத்த வழக்கறிஞருக்கான விண்ணப்பங்கள் அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டு வந்தன.

வயது வரம்பு :

மூத்த வழக்கறிஞராவதற்கு விண்ணப்பிக்க ஏற்கனவே உள்ள விதிகளுடன் தற்போது புதிதாக குறைந்தபட்சமாக 45 வயதை எட்டியிருக்க வேண்டும் என விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. பழைய முறையில் வயது வரம்பின்றி இருந்தது.

அத்துடன் 15 வருட அனுபவம், தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும். 5 ஆண்டுகளில் 15 தீர்ப்புகளில் அவரது பங்களிப்பு இருக்க வேண்டும். அவர் மீதான வழக்குகள் எதுவும் நிலுவையில் இருக்ககூடாது போன்றவை பழைய நடைமுறையில் ஏற்கெனவே உள்ளன.

மூத்த வழக்கறிஞருக்கான கட்டுப்பாடுகள்:

  • வழக்காடிகளுக்காக நீதிமன்றத்தில் நேடியாக ஆஜராகி முறையீடு செய்யவோ அல்லது வழக்கை ஒத்திவைக்க கோரிக்கையோ வைக்க கூடாது.
  • நீதிமன்றங்கள், தீர்ப்பாயம் என எதிலும் வழக்கினுடைய வழக்கறிஞர் இல்லாமல் நேரடியாக ஆஜராக கூடாது.
  • வக்காலத்து தாக்கல் செய்திருக்க கூடாது.
  • வழக்காடிகளுக்கு நேரடி சட்ட ஆலோசனை வழங்க கூடாது.