தமிழ்நாடு

தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு - குட்கா நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு - குட்கா நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

PT

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது குட்கா தயாரிப்பு நிறுவனங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா ஆகிய சுவையூட்டப்பட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதற்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு அறிவிப்பாளராக வெளியிடப்பட்டு வந்தது. இந்த உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது.

அதே நேரத்தில் இந்த தடை உத்தரவுக்கு எதிராக குட்கா, பான் மசாலா தயாரிக்கும் நிறுவனங்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, “உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தில் உறுதி செய்வதைத்தான் உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தின் பணியே தவிர, அதில் புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்த தடை மற்றும் விநியோகப்படுத்துவது முறைபடுத்துவது உள்ளிட்டவை குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே இந்த சட்டத்தின் கீழ் புகையிலை பொருட்களுக்கு முழு தடைவிதிக்க எந்த வழிவகையும் இல்லை.

அவசர நிலை கருதி தற்காலிகமாக மட்டுமே தடைசெய்ய முடியுமே, தவிர நிரந்தரத் தடை விதிக்க முடியாது. எனவே உணவு பாதுகாப்பு ஆணையர் தனது அதிகார வரம்பை மீறி இந்த விவகாரத்தில் செயல்பட்டுள்ளார். எனவே குட்கா. பான் மசாலா உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீக்கம் செய்யப்படுகிறது” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. குட்கா, பான் மசாலா போன்றவற்றால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து அரசுகள் மேற்கொண்டுவரும் விழிப்புணர்வுகளும், நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு பெரும் தடையாக மாறிவிடும். எனவே மக்கள் நலனை கருத்தில்கொண்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்துசெய்ய வேண்டுமென தமிழக அரசு அந்த மனுவில் கேட்டுக்கொண்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி கேஎம் ஜோசப் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கு மக்களின் சுகாதாரம் சார்ந்த விவகாரம் என்பதால் மிகவும் முக்கியமானது, எனவே குட்கா, பான் மசாலா போன்றவற்றிற்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், அதன் தொடர்ச்சியாகவே வழக்கின் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் “இந்த வழக்கு முதலில் என்ன என்பதை நாங்கள் படித்து பார்க்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் வெறுமனே இடைக்கால தடையை விதிக்க முடியாது. மேலும் ஆந்திரா உள்ளிட்ட சில மாநில அரசுகள் சார்பாகவும் இதேபோன்ற கோரிக்கையை வலியுறுத்தி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் நிலை என்ன என்பதையும் பார்க்கவேண்டி உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் குட்கா, பான் மசாலா தயாரிப்பு நிறுவனங்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புவதாகவும், வழக்கின் விசாரணை வரும் 20.3.2023 ஆம் தேதி நடைபெறும்” என அறிவித்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.