தமிழ்நாடு

“ஸ்ரீகாந்திற்கு மை மட்டுமே வைக்கப்பட்டது” - சத்ய பிரதா சாஹூ

“ஸ்ரீகாந்திற்கு மை மட்டுமே வைக்கப்பட்டது” - சத்ய பிரதா சாஹூ

webteam

நடிகர் ஸ்ரீகாந்திற்கு மை மட்டுமே வைக்கப்பட்டது எனவும் அவர் ஓட்டு போடவில்லை எனவும் தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் 95 தொகுதிகளுக்கு மக்களை தேர்தலும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், ரமேஷ் கண்ணா ஆகியோரின், பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இல்லை எனக் கூறி, திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன், கடும் போராட்டத்திற்கு பின், ஸ்ரீபெரும்புத்துார் தொகுதிக்கு உட்பட்ட, வளசரவாக்கம் ஓட்டுச் சாவடியில், ஓட்டு போட்டார். அப்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓட்டளிப்பது, உங்களது உரிமை. அந்த உரிமைக்காக போராடுங்கள் என தெரிவித்திருந்தார்.

இதேபோல், ஸ்ரீகாந்த், 'ஆதார்' அட்டையில், முகவரி மாற்றம் செய்திருந்தார். அதில் ஏற்பட்ட குழப்பத்திற்கு இடையே, ஓட்டுச்சாவடி முகவர்கள் மற்றும் பொது மக்கள் ஆதரவுடன், மனைவியுடன் வந்து, ஸ்ரீகாந்த், ஓட்டு போட்டார். ஒரு விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கிகொண்டு அதிகாரிகள் வாக்களிக்க அனுமதித்ததாக அவர் கூறியிருந்தார். 

இந்நிலையில், நடிகர் ஸ்ரீகாந்திற்கு மை மட்டுமே வைக்கப்பட்டது எனவும் அவர் ஓட்டு போடவில்லை எனவும் தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.