தமிழ்நாடு

பிரதமர் பாதுகாப்பில் குளறுபடியா? - அண்ணாமலைக்கு டிஜிபி சைலேந்திரபாபு, அமைச்சர் பதில்!

பிரதமர் பாதுகாப்பில் குளறுபடியா? - அண்ணாமலைக்கு டிஜிபி சைலேந்திரபாபு, அமைச்சர் பதில்!

webteam

பிரதமர்  மோடி தமிழகம் வருகையின் போது பாதுகாப்பு குறைபாடு தொடர்பான எந்த தகவலும் இல்லை என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கத்தில் 'சைபர் பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் போக்குகள்' என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கு இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ''சைபர் க்ரைம் மோசடியில் ஒரு எல்லை கிடையாது. எந்த மூலையில் இருந்தும் பணத்தை எடுத்து மோசடி செய்யலாம்.  எனவே,  பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம். சைபர் க்ரைம் மோசடியில், படித்தவர்கள் கூட கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர்.

எந்த ஒரு வங்கியும் ஓடிபி எண் கேட்பது கிடையாது. எனவே ஓடிபி எண் யாராவது கேட்டால் அவர்களிடம் பகிரக்கூடாது. இதன் மூலம் தான் குற்றங்கள் நிகழ்கிறது. ஆசை வார்த்தை கூறுபவர்களின் உண்மைத் தன்மை அறிந்த நாம் விழிப்போடு இருக்க வேண்டும். தமிழகத்தில் சைபர் க்ரைம் குற்றம் தொடர்பாக 46 காவல் நிலையம் உள்ளது. பொதுமக்கள் சைபர் கிரைம் குற்றம் தொடர்பாக இந்த காவல் நிலையங்களில் புகார் கொடுக்கலாம்''என்றார்.

இதனைத் தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் பேசும்போது, ''சென்னை பல்கலைக்கழகத்தில் சைபர் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு பயிலரங்கம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள எல்லா மக்களிடம் செல்போன் உள்ளது. இன்டர்நெட் இணைக்கப்பட்டுள்ளது. எனவே உலகத்தில் உள்ள எந்த நபரிடம் இருந்தும் நம் வங்கியில் உள்ள பணத்தை திருடலாம். `வெளிநாட்டில் போதைப் பொருள் ஏற்றுமதி செய்தது தொடர்பாக உங்களது வங்கிக்கு வங்கிக்கு பணம் வந்துள்ளது’ என்றுகூறி `உங்களுடைய ஆதார் எண் கொடுங்கள்’ என சிலர் பணமோசடியில் ஈடுபடுவர்.

தற்போது, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் கார்டு இணைக்க வேண்டும்  என்று கூறப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி சிலர் `உங்களது மின் இணைப்பு என்னுடன் ஆதார் கார்டு இணைக்கப்படவில்லை எனவே உங்களது மின்சாரம் துண்டிக்கப்படும்’ என்று கூறி `நாங்கள் அனுப்புகிற லிங்கில் பத்து ரூபாய் செலுத்துங்கள்; அப்படி செய்தால் உங்களது மின் கட்டணம் துண்டிக்கப்படாது’ என்பார்கள். இதை நம்பி நாம் மின் இணைப்பை மீண்டும் பெற அவர்கள் கொடுத்த லிங்கிற்கு பத்து ரூபாய் அனுப்பினால், நமது வங்கியில் உள்ள மொத்த பணத்தையும் அவர்கள் எடுத்து விடுவார்கள். இதுபோல் உயர் கலெக்டர், டிஜிபி பேசுவதாக கூறியும் மோசடி நடைபெறுகிறது. நம்மை ஏமாற்றுவார்கள் வெளிநாட்டில் கூட இருக்கலாம். சைபர் குற்றங்களும் ஏமாற்றப்பட்டால் 1930 இந்த எண்ணிற்கு மக்கள் புகார் கொடுக்கலாம்” என்றார்.

மேலும் பேசுகையில், “பிரதமர் தமிழக வருகையின் போது பாதுகாப்பில் எந்த குளறுபடியும் இல்லை. இது தொடர்பாக எந்த தகவலும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு உபகரணங்கள் எந்த நிலைமையில் உள்ளது என்பது குறித்து தணிக்கை செய்யப்படுகிறது. உபயோகமில்லாத உபகரணங்கள் உடனடியாக தவிர்க்கப்படுகிறது. தமிழகத்தில் தான் பிற மாநிலங்களை விட பாதுகாப்பு உபகரணங்கள் அதிக அளவில் உள்ளது.

பிற மாநிலங்கள் தமிழகத்தில் உள்ள பாதுகாப்பு உபகரணங்களை  கேட்டு வாங்கக் கூடிய அளவிற்கு தான் நம்மிடம் அதிக அளவில் பாதுகாப்பு உபகரணங்கள் தரமானதாக உள்ளது. அந்தமான், கேரளா போன்ற பிற மாநிலங்களிலும் தமிழக காவல்துறையே பாதுகாப்புக்கு செல்கிறது” என்றார். 

இதேபோல பிரதமர் பாதுகாப்பு மீதான அண்ணாமலை குற்றச்சாட்டை தமிழக அரசு சார்பில் அமைச்சர் மனோ தங்கராஜ்ஜூம் மறுத்துள்ளார்.

சென்னை கிண்டியில் நடைபெற்ற CII கருத்தரங்க நிகழ்வில் பங்கேற்று பிறகு அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ''பிரதமர் தமிழகம் வருகையின்போது உரிய பாதுகாப்பு மாநில அரசால் வழங்கப்பட்டது. இது மக்களுக்கே தெரியும். இதில் அரசியல் செய்து வெறுப்பு பிரச்சாரம் செய்கிறார் அண்ணாமலை. மேலும் பாதுகாப்பு வழிமுறையில் அனைத்தும் மாநில அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் தெரியும் என்றார்.

ஆளுநரை பா.ஜ.க நிர்வாகிகள் சந்திக்கும்போது நிலுவையில் இருக்கும் மசோதவை ஒப்புதல் அளிக்க வலியுறுத்த வேண்டியது அவசியம். இதில் ஆன்லைன் தடை மசோதாவுக்கு அனுமதி அளிக்காமல் இருந்திருக்கிறார் ஆளுநர். மாநில அரசு நிறைவேற்றம் தீர்மானத்தை ஏன் அலட்சியப்படுத்துகிறார் ஆளுநர் என்பது தெரியவில்லை.  அரசியலைப்புக்கு உட்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும்'' என்றார்.

தவற விடாதீர்: `சட்டசபையில் சட்டையை கிழித்து வந்தபோது, ஆளுநரைதான் ஸ்டாலின் முதலில் சந்தித்தார்'- அண்ணாமலை