தமிழ்நாடு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் அடிதடி, கலவரம்.. என்ன நடந்தது? - வீடியோ

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் அடிதடி, கலவரம்.. என்ன நடந்தது? - வீடியோ

webteam

காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் சென்னை மற்றும் நெல்லை மாவட்டங்களை சேர்ந்த இரு தரப்பு நிர்வாகிகள் கட்டைகளை கொண்டு தாக்கி கொண்டதில் 3 பேர் காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் செயல்பாடு குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் வந்திருந்தனர்.

அப்போது, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரை நீக்கக்கோரி, 300 -க்கும் மேற்பட்டவர்கள் கட்சி அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாததால் போராட்டக்காரர்கள் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

தர்ணாவின் போது போராட்டக்காரர்கள் மாவட்ட தலைவர் கே.பி.கே. ஜெயக்குமாரை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும் என கண்டன முழக்கங்களை எழுப்பினர். மூன்று மணி நேரம் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் திடீரென கைகலப்பு ஏற்பட்டு தள்ளுமுள்ளுவாகி அடிதடியாக மாறியது.

அப்போது கட்டையால் தாக்கி கொண்டதில் 3 பேருக்கு ரத்தம் சொட்ட சொட்ட அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில், களக்காடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜோஸ்வா மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் டேனியல் ராபர்ட் ஆகியோர் காயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அழைத்துச் செல்லப்பட்டனர். தகவலறிந்து விரைந்து 100 -க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

மேலும், திருநெல்வேலியிலிருந்து வந்தவர்களை அவர்கள் வந்த வாகனத்திலேயே ஏற்றி பாதுகாப்பாக போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.