தமிழ்நாடு

“சீரமைப்பு பணிகளை கொச்சைப்படுத்தக் கூடாது” - முதல்வர் பழனிசாமி

“சீரமைப்பு பணிகளை கொச்சைப்படுத்தக் கூடாது” - முதல்வர் பழனிசாமி

rajakannan

சீரமைப்பு பணிகளை கொச்சைப்படுத்தக் கூடாது என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். 

‘கஜா’ புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. புயல் ஓய்ந்தாலும் மக்களின் இன்னல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சூறைக்காற்றில் மேற்கூரைகள் பறந்த நிலையில், வீட்டிலிருக்கும் அனைத்து பொருள்களும் மழையால் சேதமடைந்தன. 

புயல் ஏற்படுத்திய சேதங்கள் மிக அதிகமென்றாலும், மாணவர்களுக்கு கல்வி பாதிக்கும் நிலையையும் ஏற்படுத்திச் சென்றது. பல ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. மின்சாரம் இன்றி பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன.

இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், கனமழை காரணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு செல்லாமல் பயணத்தை பாதியில் முடித்து சென்னை திரும்பினார். 

திருச்சி திரும்பிய பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளரிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “கனமழை பெய்ததால் ஹெலிகாப்டரில் நாகை, திருவாரூர் சென்று புயல் சேதத்தை பார்வையிட முடியவில்லை. திருவாரூர், நாகையில் வேறு ஒரு நாளில் புயல் சேதங்களை ஆய்வு செய்வேன். ஹெலிகாப்டரில் சென்ற போது ஏராளமான வாழை, தென்னை மரங்கள் சேதத்தை பார்க்க முடிந்தது. 

ஒரு லட்சத்துக்கும் அதிகமன மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. ஜீ பூம்பா என்று சொன்னவுடன் மின்கம்பங்களை நட்டுவிட முடியாது. புயலால் ஏற்பட்ட சேதங்கள் அதிகம் என்பதால் கணக்கிடும் பணி, நிவாரணப் பணி முடியவில்லை. புயல் பாதிப்பு சீரமைப்பு பணிகளை கொச்சைப்படுத்தக் கூடாது. புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியைச் சந்தித்து தேவையான நிதியை கோரவுள்ளேன். கடந்த காலங்களில் கேட்கப்பட்ட நிதியை விட மத்திய அரசு குறைவாகத்தான் அளித்துள்ளது.” என்று கூறினார்.