திமுக எம்.பி டி.ஆர்.பாலு மனு கொடுக்க வந்தபோது, அவரை டி.வியைப் பார்த்துக்கொண்டு அவமதிக்கவில்லை எனத் தலைமைச் செயலாளர் சண்முகம் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தமிழக தலைமைச் செயலாளரை நேற்று திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் சந்தித்து, திமுக ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை வழங்கினர். இந்தச் சம்பவத்தின் போது, தங்களைத் தலைமைச் செயலாளர் அவமதித்ததாக திமுக தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
இதற்கு தற்போது தலைமைச் செயலாளர் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில், கடுமையான பணிகளுக்கு இடையே திமுகவினருக்கு நேரம் வழங்கப்பட்டதாகவும், அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு லட்சம் மனுக்களைப் பிரித்து அனுப்புவது பெரும் பணி என்பதால், எத்தனை நாட்கள் ஆகும் தற்போது கூறமுடியாது என திமுகவினரிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தங்கள் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாமல் திமுகவினர் பத்திரிகைகளில் தங்களை அவமதித்ததாகச் செய்திகள் வெளியிட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. உண்மையில் தனக்கு திமுகவையோ எதிர்க்கட்சித் தலைவரையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை எனவும் தலைமைச் செயலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.