தமிழ்நாடு

“அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் இடங்களில் கூட்டம் இருக்கக் கூடாது”: முதல்வர்

webteam

கொரோனா வைரஸ் தொற்று குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் செயலில் ஈடுபடுவோர் மீது பொதுச் சுகாதார சட்டம் 1939-ன் விதி 41, 43, 44 -ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸை தடுக்கும் முயற்சியாக அனைத்து மாநிலங்களும் மக்கள் கூடுவதைத் தடுக்க வேண்டும் என மத்திய அரசு நேற்று வலியுறுத்தியது. இதன் எதிரொலியாகத் தமிழகத்திற்கு நாளை மாலை முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று சட்டப்பேரவையில் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவு குறித்து மேலும் சில விளக்கங்களைத் தமிழக முதல்வர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படும் மளிகைக் கடைகள், காய்கறி, பழக் கடைகள், பால் அங்காடிகள் போன்ற இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள் முறையாகக் கண்காணித்துத் தூய்மைப்படுத்த வேண்டும். காவல்துறை இத்தகைய இடங்களில் மக்கள் அதிகம் கூடாதவாறு கண்காணிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, “தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் மருத்துவ சேவைக்கென 25% ஒதுக்க வேண்டும். சோதனைச் சாவடிகளில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட வேண்டும். விமான நிலையத்தில் 2,05,391 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டு, வீட்டு கண்காணிப்பில் 9,424 பேர் உள்ளனர்.

அரசு கண்காணிப்பில் 198 பேர் உள்ளனர். அரசு மருத்துவமனையில் Isolation Ward -ல் 54 பேர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று கூறியுள்ள அவர், வெளிநாடு பயணித்தோர் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்தோர் ஆகியோரை தீவிரமாகக் கண்காணித்து, சமுதாய நலன் கருதி "சுய தனிமைப்படுத்துதல்" மூலம் அவர்கள் யாரும் பொதுமக்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பதைக் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

மேலும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்குப் பயணம் செய்தவர்களின் வீட்டுக் கதவில் "வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்" என்ற விபரம் ஒட்ட வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் செயலில் ஈடுபடுவோர் மீது பொதுச் சுகாதார சட்டம் 1939-ன் விதி 41, 43, 44 -ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் விளக்கம் அளித்துள்ளார்.