நீட் தேர்வு குறித்த சூர்யாவின் பார்வை அடுத்தாண்டு மாறும் என தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை முகப்பேரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நீட் தேர்வு குறித்த சூர்யாவின் கருத்தை ஏற்கவில்லை. சூர்யா நல்ல நடிகர். நல்ல மனிதர். அவருக்கு கருத்து கூறும் உரிமை உள்ளது. சூர்யாவின் கருத்து கடுமையாக இருந்தது. சூர்யா போன்ற நடிகர்கள் கூறும் போது அது நிறைய பேரை சென்றடையும். அடுத்த ஆண்டு நீட் தேர்வு குறித்த சூர்யாவின் பார்வை மாறும் என நம்புகிறேன்.
சூர்யாவிற்கு எதிராக நான் பதிவிடுவது போல் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட போலிக் கணக்குகளை முடக்கிவிட்டோம். இந்த ஆண்டு நீட் தேர்வு கேள்விகள் பெரும்பாலும் நம்முடைய சிலபஸில் இருந்து வந்துள்ளது. தமிழகத்தில் திமுக,அதிமுக மாற்றாக பாஜகவை மக்கள் பார்க்கின்றனர். 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக வலுவோடு காலுன்றி நிற்கக்கூடிய கட்சியாக இருக்கும்.
அடுத்த 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் அமரும். ரஜினிகாந்த் கட்சி துவங்கினால் அவருக்கான இடம் தமிழகத்தில் உள்ளது. அடிப்படையில் பாஜகவும் ரஜினியும் அரசியலில் ஒருமித்த கருத்து கொண்டது. வரும் காலங்களில் ரஜினியுடனான கூட்டணி குறித்து கட்சி மேலிடம் முடிவு எடுக்கும். கிசான் திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டிற்கும் பாஜகவிற்கு எந்த தொடர்பும் இல்லை” எனத் தெரிவித்தார்.