தமிழ்நாடு

'திமுக விரும்பியபடி ஆளுநரை ஆட்டுவிக்க முடியாது' - கராத்தே தியாகராஜன்

'திமுக விரும்பியபடி ஆளுநரை ஆட்டுவிக்க முடியாது' - கராத்தே தியாகராஜன்

webteam

திமுக விரும்பியபடி ஆளுநரை ஆட்டுவிக்க முடியாது என தமிழக பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிகழ்ச்சி மற்றும் மாநில பாஜக தலைமையகமான கமலாலய நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக ஒரு நாள் பயணமாக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுனர் மளிகையான ராஜ் பவனில் தங்கினார். இன்று காலை ஆளுனர் ஆர்.என்.ரவியும், மத்திய  அமைச்சர் அமித் ஷாவும் கலைவாணர் அரங்கத்திற்கு ஒரே காரில் சென்றனர்.

அதற்கு முன்னதாக அமித் ஷாவை பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் மற்றும் தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் எஸ்.அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் சந்தித்து வரவேற்றனர். அதன்பின்னர் கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுக-வை ஒன்றிணைப்பது குறித்து அமித்ஷா பேசுவாரா என பாஜக மேலிடமும், மாநில தலைவர் அண்ணாமலையும் தான் கருத்து கூறுவார்கள் என்று தெரிவித்தார்.

கோவை கார் வெடிப்பு, பாஜக-வினர் மீது பொய் வழக்கு ஆகியவற்றை மத்திய அரசு கவனித்து வருவதாகவும், இவற்றுக்கு காலம் பதில் சொல்லும் என்றும் அவர் தெரிவித்தார். நாளுக்கு நாள் தமிழகத்தில்  பாஜக வலிமை பெற்று வருகிறது என்றும், ஒரே ஒரு எம்.எல்.ஏ.வுடன் இருந்த திமுக தற்போது ஆட்சியில் உள்ளது என்றும், ஆனால் பாஜகவிற்கு 4 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகவும், பாஜக தமிழகத்தில் பெரியளவில் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

திமுக விரும்பியபடியெல்லாம் ஆளுநரை ஆட்டுவிக்க முடியாது என்றும், மத்திய அமைச்சரவையில் திமுக இடம்பெற்றிருந்தபோது ராஜ் பவனை தனது அலுவலகம் போல காங்கிரஸ் கட்சி பயன்படுத்தியது திமுகவிற்கு கண்ணை உறுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

இதையும் படிக்கலாமே: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை இரவில் திடீர் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்