Annamalai pt desk
தமிழ்நாடு

“கோவை தொகுதி வாக்காளர்களுக்கு பாஜக பணம் கொடுத்ததாக நிரூபித்தால்...” - அண்ணாமலை சவால்

webteam

செய்தியாளர்: எஸ் சந்திரன்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்குச்சாவடி மையத்தில் பாஜக மாநிலத் தலைவரும், கோவை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை தனது வாக்கை செலுத்தி, ஜனநாயக கடமை ஆற்றினார்.

Annamalai

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்... “திமுகவினர் பணத்தை வைத்து கோவையை வென்று விடலாம் என நினைக்கிறார்கள். கோவை தொகுதியைச் சேர்ந்த ஒரு வாக்காளர் வந்து பாஜக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக தெரிவித்தாலும், அரசியலை விட்டு அந்த நிமிடமே விலகுகிறேன்.

பணத்தை கொடுத்து தமிழகம் முழுவதும் வெற்றி பெறலாம் என திமுகவினரும் வேறு கட்சிகளும் நினைக்கிறார்கள். கோவை மக்களும், கரூர் மக்களும் அதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள், பணநாயகம் தோற்கடிக்கப்பட்டு, ஜனநாயகம் இந்த தேர்தலில் வெற்றி பெற உள்ளது.

இந்த தேர்தலில் இருந்து பண அரசியல் வேலைக்கு ஆகாது என்று அவர்களுக்கு தெரிந்து விடும். தேர்தலுக்கு ஒருநாள் முன்பு இரவு மின்சாரத்தை அணைத்துவிட்டு பணம் கொடுப்பது இந்த தேர்தலில் வேலைக்காகாது. முழு நேர்மையாக அறம் சார்ந்து இந்த தேர்தலை நடத்தி இருக்கிறோம். இது கோவை மக்களுக்கு நன்றாக தெரியும்.

கோவையில் கோடிக்கணக்கில் பணம் புரளுகிறது. திமுக எந்த அதிகாரிகளையேனும் வைத்து, ஒரு வாக்காளனையாவது பாஜக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக நிரூபிக்கட்டும், கோவை தொகுதியில் இந்த தேர்தலை ஒரு வேள்வியாக நினைத்து களத்தில் இருக்கிறேன்.

இந்த தேர்தலில் ஜனநாயகத்தை மீட்டெடுத்து, பணநாயகத்தை மக்கள் தோற்கடிப்பார்கள். ஜூன் நான்காம் தேதி தமிழகம் முழுவதுமே மிகப்பெரிய மாற்றம் இருக்கும்” என்றார்.

Annamalai

தொடர்ந்து அவரிடம் ‘இந்தத் தேர்தலில் மோடிக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்’ என்று முதல்வர் கூறியயது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “நல்ல பாடம் என்றால் தமிழகத்தில் பாஜகவுக்கு 39க்கு 39 தொகுதி வெற்றி வாய்ப்பை மக்கள் கொடுப்பார்கள் என்று அர்த்தம்” என்றார்.