தமிழ்நாடு

"மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு" - அண்ணாமலை

"மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு" - அண்ணாமலை

webteam

மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு தரவேண்டிய நீரை முறையாக வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பெரம்பலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும் “மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்னவோ அதுதான் தமிழக பாஜகவின் நிலைப்பாடு. தமிழக விவசாயிகள் பக்கம் பாஜக நிற்கும். மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ்தான் இரட்டை நிலைப்பாட்டுடன் உள்ளது. மேகதாது அணை விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. மத்திய அரசை ஒன்றிய அரசு எனக்கூறி திமுக அரசியல் செய்கிறது.

இந்தியா, தமிழ்நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. பாஜகவிற்கு பிரித்தாளும் எண்ணம் இல்லை. கொங்குநாடு என்ற வார்த்தை பலகாலமாக இருக்கும் சோசியல் ஐடென்டி. பாஜக தலைவர்கள் யாரும் கொங்குநாடு குறித்து கருத்து கூறவில்லை. கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் கொங்குமண்டலம் புறக்கணிக்கப்பட்டது. கொங்குநாடு விவகாரம் குறித்து நாளை கமலாலயத்தில் விரிவாக கருத்து தெரிவிக்க உள்ளோம்.

அதேபோல் பெட்ரோல் விலை குறைப்பு குறித்து திமுக பொய்யான வாக்குறுதியை கொடுத்துள்ளது. அதுகுறித்து தமிழக நிதி அமைச்சரிடம் கேள்வி எழுப்புங்கள். ஆன்லைனில் பொய் செய்தி வெளியிடுவதை தடுக்க சட்டம் வர உள்ளது. பாஜகவின் நேரடி எதிரி திமுக. பாஜக சித்தாந்தங்களை கொண்ட கட்சி. திமுக ஐ.டி விங்கில் திராவிட நாடு கொள்கை அப்படியே இருக்கிறது என்று பதிவிடப்பட்டுள்ளது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.