RN Ravi Facebook
தமிழ்நாடு

‘ஆடியோவில் இருப்பது பழனிவேல் தியாகராஜன் குரலேதான்’ - நிரூபிக்க தனிநபர் ஆணையம் கேட்கும் பாஜக!

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்தான் பேசினார் என நாங்கள் நம்புகிறோம் எனக் கூறியுள்ளார் வி.பி.துரைசாமி.

PT WEB

நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது பொய்யான ஆடியோ அவர் தரப்பிலிருந்து விளக்கம் கொடுத்திருந்தார். இதற்கிடையே நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "இந்த ஆடியோவின் உண்மை தன்மையை கண்டறிய சுதந்திரமான தடயவியல் தணிக்கை அறிக்கை கோரி ஆளுநரை பாஜக குழு சந்திக்கும்" என்று தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் நேற்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற பாஜக மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு நாகராஜன், பால் கனகராஜ், மாநில செயலாளர்கள் சதீஷ், ஆனந்த பிரியா உள்ளிடோர் ஆளுனர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து ஆடியோவின் உண்மை தன்மையை தடயவியல் தணிக்கை செய்யக்கோரி கோரிக்கை வைத்தனர்.

Annamalai

சுமார் 45 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பை தொடர்ந்து வி பி துரைசாமி, கரு நாகராஜன் ஆகியோர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது பேசிய வி.பி. துரைசாமி, “தமிழக பாஜக சார்பாகவும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சார்பாகவும், ஒரு புகார் மனுவை ஆளுநரிடம் அளித்துள்ளோம். அந்த புகார் மனுவில் சுதந்திரமான தடயவியல் தணிக்கை அறிக்கை வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நண்பரிடம் பேசும் பொழுது உதயநிதி ஸ்டாலின், சபரீசன் ஆகியோர் ஊழல் செய்து 30 ஆயிரம் கோடியை பணத்தை சேர்த்து விட்டார்கள், அதை எப்படி மறைத்து வைக்கப் போகிறார்கள் என்று பேசியுள்ளார். ஆனால் இப்போது அவர் தான் பேசவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களின் நன்மைக்காக அந்த ஆடியோ மீது சுதந்திரமான தடயவியல் தணிக்கை செய்யக்கோரி ஆளுநரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். மேலும் பி டி ஆரின் மீது நடவடிக்கை எடுத்து, விசாரணை செய்து உண்மையை கண்டறிய வேண்டும் என ஆளுநரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். ஆளுநர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். அவர் குற்றவாளி இல்லை என நிரூபிக்கட்டும். அவர் குற்றவாளி என நீதிமன்றம் சென்று நாங்கள் நிரூபிப்போம். அது அவர் குரல் தான் என நாங்கள் நம்புகிறோம்.

PTR

மக்களின் வரிப்பணம் தனிமனிதனின் பாக்கெட்டுக்கு சென்று விட்டது என்பதை கண்டறிய வேண்டும் என்ற அக்கறையோடு பாஜக பாடுபடுகிறது'' என்றார்.

அவரைத் தொடர்ந்து கரு நாகராஜன் பேசுகையில், ''பழனிவேல் தியாகராஜன் தான் பேசினார் என நாங்கள் அடித்து சொல்கிறோம். அதை நிரூபிக்க தனிநபர் ஆணையம் வேண்டும் என கேட்டு உள்ளோம்'' என்றார்.