TN Assembly கோப்புப்படம்
தமிழ்நாடு

இன்று சட்டமன்ற சிறப்பு கூட்டம்... ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களுக்கு தனித்தீர்மானம்

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், அவற்றை மீண்டும் நிறைவேற்றுவதற்காக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

webteam

சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஓப்புதல் அளிக்காமல் இழுத்தடிப்பதாக தமிழக அரசு குற்றம் சாட்டிவரும் சூழலில், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள 10 சட்ட மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி சில தினங்களுக்கு முன் அனுப்பியிருந்தார்.

(ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களின் விவரம், இங்கே...)

ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய மசோதாக்கள் என்னென்ன?

திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று கூடுகிறது. காலை 10 மணிக்கு அவை கூடியதும் ஆன்மிகவாதி பங்காரு அடிகளார் மற்றும் சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட உள்ளன.

இதனைத் தொடர்ந்து 10 சட்ட மசோதாக்களை அவையில் தாக்கல் செய்வது தொடர்பான தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாசிப்பார்.

தனித் தீர்மானத்தில் எவ்வித காரணமும் குறிப்பிடாமல் ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாகக் கூறி, சட்ட மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது ஏற்புடையதல்ல எனவும், பேரவை விதி 143-ன் கீழ் சட்ட மசோதாக்களை மறு ஆய்வு செய்து, ஆளுநரின் ஒப்புதலுக்காக திருப்பி அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து 10 மசோதாக்களையும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் அவையில் தாக்கல் செய்வார்கள்.