தமிழ்நாடு

தமிழகத்தை ஆளப்போவது யார்? - காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

தமிழகத்தை ஆளப்போவது யார்? - காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

webteam

தமிழக மக்களின் ஒரு மாத காத்திருப்புக்கு இன்று விடை தெரியபோகிறது. தங்களை ஆளப்போகிறவர்கள் யார் என கடந்த மாதம் 6 ஆம் தேதி தமிழக மக்கள் வாக்களித்திருந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுடன், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 75 மையங்கள், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஒரு மையம் என 76 இடங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இன்று காலை 8 மணி வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட உள்ள நிலையில், அந்தப்பணியை 16 ஆயிரம் அலுவலர்கள் மேற்கொள்கின்றனர்.

தமிழகத் தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மநீம கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வேட்பாளர்கள், வேட்பாளரின் தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் தொடர்புடைய பணியாளர்கள் மட்டுமே மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் 48 மணி நேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் சான்றிதழோ அல்லது இருமுறை தடுப்பூசியோ போட்டிருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் வெப்ப பரிசோதனையின்போது, 98.6 பாரன்ஹீட்க்கு அதிகமாக இருந்தால், அந்த நபர் அனுமதிக்கப்பட மாட்டார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்கு எண்ணும் மையங்களில் மருத்துவக் குழு ஒன்றும் தயாராக இருக்கும். இன்று பொது முடக்கம் என்பதால் வாக்கு எண்ணிக்கை பாதிக்காமல் இருக்க வேட்பாளர்கள், முகவர்கள், தேர்தல் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொற்று பரவல் தடுப்பை கருத்தில்கொண்டு வெற்றி கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமுக்கு துணை ராணுவப் படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தைப் போலவே, புதுச்சேரி, மேற்குவங்கம், கேரளா, அசாம் மாநிலங்களிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

புதிய தலைமுறையின் சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்பு நேலைக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழகத்தில் முடிவுகளை உடனுக்குடன் வழங்குவதற்கு உங்கள் புதிய தலைமுறை பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து நமது செய்தியாளர்களும் இணைந்துள்ளனர்.