தமிழ்நாடு

தென்னங்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்க திட்டம் !

தென்னங்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்க திட்டம் !

webteam

கஜா புயலால், தென்னை மரங்களை இழந்து வாடும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் தென்னங்கன்றுகளை வழங்க திட்டமிட்டுள்ளது.

‘கஜா’ புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர்,தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கஜா புயலால் தஞ்சை உள்ளிட்ட  மாவட்டங்களில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன. பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் வாழ்வாதாரமாக விளங்கிய தென்னை மரங்கள் சீரழிந்து கிடப்பதால் விவசாயிகள் செய்வதறியாது இருக்கின்றனர்.

இந்நிலையில் தென்னை பயிருக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ஒரு மரத்திற்கு 600 ரூபாய் வழங்கவும், அவற்றை வெட்டி அகற்றிட ஒரு மரத்திற்கு 500 ரூபாய் வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மொத்தமாக ஒரு மரத்திற்கு 1100 ரூபாய் வழங்கப்படும் என்றும், சுமார் 175 மரங்கள் நடப்பட்டுள்ள ஹெக்டேர் ஒன்றுக்கு 1,92,500 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தென்னையை இழந்து வாடும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் தென்னங்கன்றுகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக கோவை மாவட்டம் ஆழியாறில் உள்ள ஆய்வு நிலையத்தில் தென்னங்கன்றுகளை வளர்ப்பதற்கான பணிகளை வேளாண் பல்கலைகழகம் தீவிரப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளை கண்டறிந்து ஒவ்வொரு கட்டமாக தென்னங்கன்றுகள் வழங்கப்படுமென வேளாண் பல்கலைகழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.