என்கவுண்டர் pt web
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 26 ஆண்டுகளில் 125 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை! யாருடைய ஆட்சியில் எவ்வளவு நடந்தது?

தமிழ்நாட்டில் கடந்த 26 ஆண்டுகளில் மொத்தம் 125 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர். எந்தெந்த கால கட்டங்களில் என்கவுன்டர்கள் நிகழ்ந்தன என்பதையும், குற்றவாளிகளை கையாளும் வழிமுறைகள் என்ன என்பதையும் காண்போம்.

PT WEB

தமிழ்நாட்டில் 1998ஆம் ஆண்டு முதல் திமுக ஆட்சி காலத்தில் 69 என்கவுன்டர்களும் அதிமுக ஆட்சி காலத்தில் 56 என்கவுன்ட்டர்களும் நிகழ்ந்துள்ளன.

1998 முதல் 2001 வரை திமுக ஆட்சியில் 22 என்கவுண்டர்களும், 2001-ல் இருந்து 2006 வரை அதிமுக ஆட்சியில் 29 என்கவுன்டர்களும் நிகழ்ந்துள்ளன. 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் 31 என்கவுன்டர்களும், 2011-ல் இருந்து 2021 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் 27 என்கவுன்டர்களும் நிகழ்ந்துள்ளன. தற்போதைய திமுக ஆட்சியில் கடந்த 2021 மே மாதம் முதல் தற்போது வரை 16 என்கவுன்டர்கள் நடைபெற்றிருப்பதாக மக்கள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

என்கவுண்டர்

குற்றப் பின்னணி என்கவுன்டருக்கு இடையே, அதிமுக ஆட்சியில் 2011ஆம் ஆண்டு பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 7 பேரும், 2018ஆம் ஆண்டு தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேரும் கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக, காவல்துறை வட்டாரத்தில் கேட்டபோது, சுமார் 100 என்கவுன்டர்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், குற்றவாளிகளை கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய 41 விதிமுறைகளை தமிழக காவல்துறை கைவசம் வைத்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நபரையோ, சந்தேகிக்கும் நபரையோ அடிக்கவோ அல்லது சித்ரவதை செய்யவோ கூடாது, குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல் நிலையம் தவிர விடுதிகள், குடியிருப்புகள் போன்றவற்றில் தங்க வைக்கக்கூடாது, குற்றம் சாட்டப்பட்டவரை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும், கண்டிப்பாக சட்டவிரோத காவலில் குற்றவாளியை வைக்கக்கூடாது என சட்ட-திட்டங்கள் உள்ளன.

என்கவுண்டர்

காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் மீது பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதால், குற்றம்சாட்டப்பட்டவர், நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்யப்படும் வரை டிஎஸ்பி காவல் நிலையத்தில் வைக்க வேண்டும் என்ற விதிகள் உள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதற்காக அவர்களது குடும்ப உறுப்பினர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வரக்கூடாது என்பன போன்ற அறிவுறுத்தல்களும் தமிழ்நாடு காவல்துறை சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளன.