தமிழ்நாடு

பண்டைக்கால பானைகளில் தமிழ் எழுத்துக்கள் : ஈரோட்டில் கண்டுபிடிப்பு

webteam

ஈரோட்டில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள பானைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த கொடுமணலில் ‘அ, ஆ, இ, ஈ’ ஆகிய தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானைகள் கிடைத்துள்ளன. பிராமி எழுத்துகளின் துவக்கத்தை கண்டறியவும், காலநிர்ணயம் செய்வதற்காகவும் மத்திய தொல்லியல்துறையினர் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில், முதல் முறையாக பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ள பானைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று வணிகர்கள் பயன்படுத்தும் 'லவஸ' என்ற பிராமி எழுத்துக்களின் சுடுமண்ணால் ஆன முத்திரையும் கிடைத்துள்ளது. அத்துடன் இரும்பாலான கருவிகள், தங்கம், செம்பு, அமெதிஸ்ட், சூடுபவளம், கண்ணாடி ஆகியவற்றால் செய்யப்பட்ட ஆபரணங்கள் மற்றும் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பொருட்கள் தொடர்பாக டெல்லியிலும், வெளிநாட்டிலும் ஆய்வு செய்யப்படவுள்ளது.