தமிழ்நாடு

காவிரிக்காக திரையுலகம் போராட்டம்: தாமதமாக பங்கேற்கும் ரஜினி, கமல் !

காவிரிக்காக திரையுலகம் போராட்டம்: தாமதமாக பங்கேற்கும் ரஜினி, கமல் !

webteam

காவிரி மேலாண்மை வாரி‌யம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் தொடங்கிய தமிழ்த் திரையுலகினரின் போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இதுவரை கலந்துகொள்ளாதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடுவிற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. விவசாய அமைப்புகள், பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் காவிரி போராட்டம் தமிழகத்தில் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழ் திரையுலகினர் இன்று கண்டனப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 9 மணிக்கு தொடங்கியுள்ள இந்த போராட்டம் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. போராட்டத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர்கள் சிவகுமார், விஜய், கார்த்தி, சிவகார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் ரஜினி, கமல், ஆகியோர் இதுவரை கலந்துகொள்ளவில்லை. இது உண்ணாவிரதம் இருப்பவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் ரஜினி 10.30 மணிக்கு வருவார் என்றும் கமல்ஹாசன் 11.30 மணிக்கு வருவார் என்று கூறப்படுகிறது.

மதியம் வரை மட்டுமே நடக்கும் போராட்டத்தில் கூட முன்னணி நடிகர்களான ரஜினியும் கமலும் முழுமையாக கலந்து கொள்ளாதது பற்றி நடிகர்கள் சிலர் கவலைத் தெரிவித்தனர்.