தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசத்தை நடத்துவது தொடர்பாக முதலமைச்சரும் ஆதீனமும் பேசித் தீர்க்கவேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநர்கள் இருவரும் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியதாக கூறினார்.
தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசத்தை நடத்துவது தொடர்பாக பேசிய தமிழிசை “ஆதீனங்கள்தான் தமிழை வளர்த்தனர். ஆதீனங்கள் இல்லாமல் தமிழ் வளர்ச்சி இல்லை. காவித் தமிழாகவே தமிழ் வளர்ந்தது. கருப்புத் தமிழாக வளரவில்லை. தமிழைப் போற்றினால் காவியையும் போற்ற வேண்டும். ஆதீனக் காவியைக் குறிப்பிட்டுச் சொன்னேன். இன்றும் அதையே தான் முன்மொழிகிறேன். 500 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பட்டணப் பிரவேசம் நிச்சயமாக நடக்க வேண்டும். பட்டணப் பிரவேசத்தை நடத்துவது தொடர்பாக முதலமைச்சரும் ஆதீனமும் இணைந்து உட்கார்ந்து பேசி தீர்வுகாண வேண்டும்” என்று கூறினார்.