சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படையின் 92 ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட விமானப்படை வீரர்கள் அணி வகுப்பில் கலந்து கொண்டனர்.
அப்போது, வெயிலின் தாக்கத்தின் காரணமாக அணிவகுப்பு நடைபெற்ற போது, 3க்கும் மேற்பட்ட விமானப்படை வீரர்கள் மயக்கமடைந்தனர்.
இதையடுத்து மயக்கமடைந்த வீரர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சியில் தலைமை ஏர்மார்ஷல் ஏபி சிங் பேசுகையில், “எந்த சூழலிலும் எதிர் கொள்ளும் வகையில் IAF தயாராக இருக்க வேண்டும். கதன் சக்தி கூட்டுப் பயிற்சியில் இந்தியாவோடு 30 நாடுகள் சேர்ந்து விமான பயிற்சி மேற்கொள்ள உள்ளது. உலகளாவிய விமானத் திறனை வெளிப்படுத்தவும் பயிற்சி மேற்கொள்ளவும் ககன் சக்தி ஒரு வாய்ப்பாக இருக்கும். 71 வருடங்களுக்குப் பிறகு இத்தனை நாடுகள் விமான கூட்டு பயிற்சி மேற்கொள்வது இதுவே முதல் முறை.
இந்திய விமானப்படை எல்லைகளை பாதுகாப்பது மட்டுமின்றி பேரிடர் காலங்களில் மீட்பு பணியில் ஈடுபடுவது நிவாரணங்கள் வழங்குவது காடுகள் கடல் கண்காணிப்பு போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறது.
மெரினாவில் சிறப்பாக நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு அளித்த தமிழ்நாடு அரசுக்கும் சென்னை மாநகராட்சிக்கும் நன்றிகள்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, சென்னை மெரினாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வெப்ப தாக்கத்தின் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர். இதற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.