தாம்பரம் பகுதியில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகியாக இருந்துவரும் கருப்பசாமி தற்கொலை செய்திருக்கிறார். அதன் பின்னணியில், காதலியுடன் அவர் வீடியோ காலில் பேசிய போது ஏற்பட்ட மனக்கசப்பில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாம்பரம், கடப்பேரி அருகே உள்ள புலிகொரடு பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (27). இவர் லாரி ஓட்டிநராக இருந்து வருகிறார். இவர் தாம்பரம் மேற்கு பகுதி 32ஆவது வார்டு விஜய் மக்கள் இயக்க தலைவராக இருந்து வந்துள்ளார். திருமணம் ஆகாத இவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரது தாய் சின்னமாவிடம் மதுபோதையில் சண்டை போட்டு கொண்டு, தாம்பரம் - திருநீர்மலை சாலையில் அற்புதம் நகர் பகுதியில் தன்னுடன் வேலை செய்யும் சக லாரி ஓட்டுநர்கள் தங்கும் அறையில் தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலை மது போதையில் இருந்த கருப்புசாமி தான் காதலித்து வந்த பள்ளி மாணவியுடன் செல்போனில் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என அவர் கேட்டதற்கு, பள்ளி மாணவி தான் படித்து முடித்த பின்னர் செய்து கொள்ளலாம் என கூறியதாக சொல்லப்படுகிறது. பின்னர் மாணவியின் தாய் வந்துவிட்டதால் மாணவி இணைப்பை துண்டித்ததாகவும், சிறிது நேரம் கழித்து மீண்டும் கருப்புசாமிக்கு தொடர்பு கொண்ட போது, அவர் அழைப்பை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பின்னர் கருப்புசாமியின் தாய் மற்றும் சகோதரியிடம் தொடர்பு கொண்ட பள்ளி மாணவி, கருப்புசாமி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியதாக தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கருப்புசாமியின் தாய் சின்னம்மா, அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்த போது, அங்கு புடவையால் தூக்கிட்டு கருப்புசாமி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாம்பரம் காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.