ஈரோடு அருகே ஆஃப் லைனில் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுக் கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடைபெற்று வந்தது. தற்போது கல்லூரிகள் வழக்கம்போல செயல்பட துவங்கியதை அடுத்து தேர்வுகள் ஆன்லைன் இல்லாமல் வழக்கம்போல நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் அரசுக் கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் எழுமாத்தூர் நான்கு வழிச் சாலையில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மொடக்குறிச்சி ஆய்வாளர் தீபா மற்றும் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து கல்லூரி முதல்வர் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறியதையடுத்து மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனர்.