தமிழ்நாடு

"கோர்ட் சொல்லியும் குழந்தைகளை தர மாட்டிங்குறாங்க” - தர்ணாவில் ஈடுபட்ட தாசில்தார் மனைவி

"கோர்ட் சொல்லியும் குழந்தைகளை தர மாட்டிங்குறாங்க” - தர்ணாவில் ஈடுபட்ட தாசில்தார் மனைவி

webteam

தனது குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி தூத்துக்குடி பறக்கும் படை தாசில்தார் வீட்டு முன்பு அவரது மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் பிரிவில் பறக்கும் படை தாசில்தாராக பணியாற்றி வருபவர் ஞானராஜ். இவரது மனைவி கிரேசி விஜயா. இவர்கள் இருவருக்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய இரண்டு குழந்தைகளையும் ஞானராஜ் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். இதையடுத்து குழந்தைகள் தன்னிடம் தான் இருக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து விஜயா சிப்காட் காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சேரலாதன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏழாம் தேதி இரண்டு குழந்தைகளையும் நீதிமன்றத்திற்கு அழைத்து வருமாறு கூறினார். இரண்டு குழந்தைகளையும் விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு அழைத்து வராததால் இரு குழந்தைகளையும் உடனடியாக தாய் விஜயாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி தனது குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு தாசில்தார் ஞானராஜ் வீட்டு முன்பு தரையில் அமர்ந்து அவரது மனைவி விஜயா தர்ணா போராட்டம் நடத்தினார்.