தமிழ்நாடு

தேர்தல் சீர்திருத்தங்களின் நாயகன் டி.என்.சேஷன்..!

தேர்தல் சீர்திருத்தங்களின் நாயகன் டி.என்.சேஷன்..!

Rasus

ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியை தொடங்கினாலும் டி.என்.சேஷன் அனைவராலும் அறியப்பட்டது இந்திய தலைமைத் தேர்தல் ஆணயராகத்தான். காகிதத்தில் இருந்த சட்டங்கள் அனைத்துமே, அவர் பொறுப்பேற்ற பிறகுதான் நடைமுறைக்கு வந்தன.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு ஒருங்கிணைந்த மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த கேரளாவின் பாலாக்காடு மாவட்டத்தில் பிறந்தவர் டி.என்.சேஷன். சொந்த ஊரின் அடையாளத்துடன் திருநெல்லை நாராயண ஐயர் சேஷன் என்று அவர் அழைக்கப்பட்டார். பாலக்காட்டில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த சேஷன், சென்னை கிறிஸ்தவ கல்லூரியில், இயற்பியலில் பட்டம் பெற்றார். பின்பு அதே கல்லூரியில் பணியாற்றிக் கொண்டே 1955-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் வென்றார். பின்னர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தமிழக அரசிலும், மத்திய அரசிலும் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்த டி.என்.சேஷன், ராஜீவ் காந்தி ஆட்சியில் கேபினட் செகரட்டரியாக பதவியேற்றார். திட்டக் குழு உறுப்பினராக பதவி வகித்த டி.என்.சேஷன் 1990-ஆம் ஆண்டு 10-வது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அதுவரை எழுத்தில் இருந்த சட்டங்களையும், உத்தரவுகளையும், கடுமையாக நடைமுறைப்படுத்த தொடங்கினார் டி.என்.சேஷன்.

குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பரப்புரை செய்வதை தடுத்து நிறுத்தினார். 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலின் போது இந்தக் கட்டுப்பாடு மிகத்தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்டிப்பாக அமல்படுத்தியதிலும் சேஷன் பங்கு அளப்பரியது. அதுவரை அரசியல் கட்சியினர் வாக்காளர்களை, வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து வருவது மிகச்சாதாரணமாக இருந்தது. அதை முற்றிலும் ஒழித்தார் சேஷன். அரசின் கட்டுப்பாட்டிலிருந்த தேர்தல் ஆணையத்தை தனித்துவமாக இயங்கச் செய்த சேஷன், கள்ள வாக்குகளை தடுக்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகம் செய்தார்.

வாக்குக்கு பணம், பரப்புரையின் போது மதுவிநியோகம், வழிப்பாட்டுத் தலங்களில் பரப்புரை போன்றவற்றை முடிவுக்கு கொண்டுவரவில்லை என்றாலும், கட்டுக்குள் கொண்டுவந்தார் சேஷன். சுவர் விளம்பரங்களை முறைப்படுத்தியதில் சேஷனுக்கு பெரும் பங்கு உண்டு. தேர்தல் நடைமுறைகளை பார்வையிடுவதற்காக பார்வையாளர்களை நியமித்த சேஷன், வேட்பாளர்களின் செலவுகளை கட்டுப்படுத்தினார். மேலும், செலவு கணக்குகளை கட்டாயம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

1996-ஆம் ஆண்டு தலைமை தேர்தல் ஆணையர் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்ற டி.என்.சேஷனுக்கு, தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தத்தை மேற்கொண்டதற்காக ஆசியாவின் நோபல் என்றழைக்கப்படும் மகசசே விருது வழங்கப்பட்டது.

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற சேஷன், 1997-ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில், கே.ஆர்.நாராயணனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதையடுத்து 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் களம் இறக்கப்பட்டார் சேஷன். இதில் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சேஷன் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

அதன்பிறகு எவ்வித தீவிர அரசியலிலும் தன்னை ஈடுபடுத்தி கொள்ளாத சேஷன் சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வந்தார். டி.என்.சேஷன் மறைந்தாலும், அவரது பெயரை உச்சரிக்கும்போதே, தேர்தல் ஆணையத்தில் அவர் செயல்படுத்திய சீர்திருத்தங்கள்தான் அனைவரின் நினைவில் வரும்