தமிழ்நாடு

அதிர்வுகளை ஏற்படுத்திய சூர்யாவின் சமீபத்திய அறிக்கைகள்..!

அதிர்வுகளை ஏற்படுத்திய சூர்யாவின் சமீபத்திய அறிக்கைகள்..!

webteam


நடிகர் சூர்யாவின் கருத்துகள் பல தருணங்களில் அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை உள்ளிட்டவற்றில் அவரது பார்வை பலரால் பாராட்டப்பட்ட போதினும், விமர்சன கணைகளும் வந்து விழத்தான் செய்தன.

 நீட் தேர்வு அச்சத்தால், மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் “நீட் தேர்வு அச்சத்தால், ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. நீட் போன்ற 'மனுநீதி' தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி, உயிர்களையும் பறிக்கிறது. மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டுமே காணிக்கையாக கேட்டனர். ஆனால் நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் 6ம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள் என்று சூர்யா அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இதைப் போலவே, புதிய கல்விக் கொள்கை குறித்தும் துணிச்சல்மிக்க கருத்துகளை முன்வைத்த சூர்யா “ 30 கோடி இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய கல்வி கொள்கை பற்றிய உரையாடல்களோ, விவாதங்களோ போதிய கவனம் பெறவில்லை” என்று கூறினார். சூர்யாவின் இந்த கருத்துக்கு பிறகு பலரும் புதிய கல்விக் கொள்கை பற்றி பேசத் தொடங்கினர். அத்துடன் மற்றொரு அறிக்கை மூலம், கல்வி என்பது "சமூக அறம்", நம் நாட்டில் கல்வியானது, ஏழைகளுக்கு ஒன்றாகவும், வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது என்று சூர்யா விமர்சித்திருந்தார்.

கல்வி குறித்து தொடர்ந்து பேசி வரும் சூர்யா, சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். குறிப்பாக, 'சுற்றுச்சூழல் தாக்க மதீப்பீடு 2020' வரைவு குறித்து அனைவரும் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். மேலும், பேசிய வார்த்தைகளை விட பேசாத மெளனம் மிகவும் ஆபத்தானது. காக்க. காக்க. சுற்றுச்சூழல் காக்க. நம் மெளனம் கலைப்போம் என டிவிட்டரில் சூர்யா பதிவிட்டிருந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸாரால் தந்தை- மகன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்த சூர்யா “'மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களுக்குகூட மரண தண்டனை கூடாது' என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன. இந்த நிலையில், சாத்தான்குளம் விவகாரம் 'லாக்கப் அத்துமீறல்' காவல்துறையின் மாண்பை குறைக்கும் செயல் என்றும் 'இது ஏதோ ஒரு இடத்தில் தவறு நடந்த சம்பவம் என்று கடந்து செல்ல முடியாது" எனவும் சூர்யா கூறினார்

தஞ்சை பெரிய கோவில் பற்றிய ஜோதிகாவின் பேச்சுக்கு கண்டனம் எழுந்தபோது, 'கோவில்களைப் போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும்" என்ற ஜோதிகாவின் பேச்சை சிலர் குற்றமாக பார்ப்பதாகவும், ஆனால் இதே கருத்தை விவேகானந்தர் மற்றும் ஆன்மீக பெரியவர்களும் கூறியிருப்பதாகவும் சூர்யா தெரிவித்தார். அதில் மதங்களை கடந்து மனிதமே முக்கியம் என்று சூர்யா குறிப்பிட்டிருந்தார்.