தமிழ்நாடு

ஊரடங்கால் பாதித்த பிழைப்பு : காரை பிரியாணி கடையாக மாற்றிய ஓட்டுநர்

PT

கொரோனா ஊரடங்கு காரணமாக வாடிக்கையாளர்கள் கிடைக்காததால் காரிலேயே ஓட்டுநர் பிரியாணி விற்பனை செய்து வருகிறார்.


மதுரை திருநகர் பகுதியில் வசித்து வருபவர் மாஹின். இவர் கடந்த 14 வருடங்களாக வாடகை கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டதால் வருமானம் இல்லாமல் வீட்டிலிருந்து வந்த மாஹின் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் காரை வழக்கமான இடத்தில் வாடிக்கையாளர்கள் வருகைக்காக நிறுத்தியுள்ளார்.

ஆனால் வெகு நாட்களாகியும் வாடிக்கையாளர்கள் யாரும் வரவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் தனது வாடகை காரை பிரியாணி கடையாக மாற்றிய மாஹின், தினமும் வீட்டில் சிக்கன் பிரியாணி செய்து அதைப் பொட்டலங்களாகக் கட்டி கடந்த மூன்று நாட்களாக காரில் வைத்துக் குறைந்த விலையில்  விற்பனை செய்து வருகிறார்.

இது குறித்து மாஹின் கூறும் போது  “ஊரடங்கு காலத்தில் தொழில் மிகவும் பாதித்துள்ளது. எந்த ஒரு விஷேச நிகழ்ச்சிகளும் இல்லை. வாடகைக்கு கார் ஓட்டி வெளியூர்களுக்கும் செல்ல முடியாத நிலை. ஆகையால் கடந்த மூன்று நாட்களாக என் வீட்டிலேயே பிரியாணி செய்து அதனைப் பொட்டலங்களாக மடித்து விற்பனை செய்து வருகிறேன். வியாபாரம் சுமாராக இருந்தாலும் கணிசமாக வருமானம் கிடைக்கிறது” என்று கூறினார்.