ஆம்ஸ்ட்ராங் - திருமாவளவன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

“சரணடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை”- ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் திருமா சொன்ன திடுக்கிடும் தகவல்!

ஜெனிட்டா ரோஸ்லின்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று இரவு தனது பழைய வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தின் அருகே நின்று, தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத 8 பேர் சரமாரியாக அவரை வெட்டிக் கொலை செய்தனர். பின் நள்ளிரவிலேயே 8 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.

ஆம்ஸ்ட்ராங்

இந்நிலையில் இப்படுகொலையை கண்டித்து, ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்த நிலையில் வைக்கப்பட்டுள்ள இவரது உடலையும் வாங்க மறுத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அச்சமயத்தில் இன்று காலை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சென்றார் விசிக தலைவர் திருமாவளவன். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “சரணடைந்திருப்பது உண்மையான குற்றவாளிகள் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில், “பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஆம்ஸ்ட்ராங் உடலை வைக்க உள்ளோம். இதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், பகுஜன் சமாஜ் கட்சி அலுவகலத்தின் வளாகத்திலேயே ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று அரசிடம் அனுமதி கோரியுள்ளோம்.

இந்த கொலையில் பின்புறம் இருக்கும் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை. இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், அவர்களை தூண்டிவிட்டவர்கள் என அனைவரையும் கைது செய்ய வேண்டும். ‘சரணடைந்தவர்களை கைது செய்து விட்டோம்’ என்று புலன் விசாரணையை நிறுத்தி விட கூடாது.

இதன் பின்புறம் உள்ள உண்மை குற்றவாளிகள் யாரோ அவர்களை கைது செய்ய வேண்டும். பகுஜன் சமாஜ் வாடி, விடுதலை சிறுத்தைகள், இங்கு திரண்டிருக்கும் அமைப்புகளின் சார்பாக தமிழக அரசுக்கு இதை கோரிக்கையாக வைக்கிறோம். ஆம்ஸ்ட்ராங் பொதுமக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்துள்ளார். இதனால், இவருக்கு ஆங்காங்கே பகை, முன்விரோதம் எழுந்ததுண்டு.

இது போலீஸுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே, இவருக்கு உண்டான பாதுகாப்பினை காவல்துறையினர் வழங்கியிருக்க வேண்டும். இனி குற்றவாளிகளை கைது செய்வதிலாவது போலீஸார் விழிப்பாக இருக்க வேண்டும். அலட்சியமாக இருந்து விட கூடாது என வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டில், குறிப்பாக தென் மாவட்டங்களில் தலித்துகள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவது நீடிக்கிறது. இன்று ஒரு அரசியல் தலைவர் அவரின் இல்லத்தின் அருகேயே கொலை செய்யப்பட்டுள்ளார். இப்படியான கூலிப்படை கும்பலை, சாதிய வாத, கொலைகார கும்பலை கட்டப்படுத்த தவறினால் அரசுக்கு இதனால் கலங்கம் ஏற்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இது காவல்துறைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் விடுக்கப்பட்டிருக்கும் சவால்” என்றார்.