மேட்டூர் அணையில் இருந்து கடந்த 5 நாட்களாக திறக்கப்பட்டு வந்த உபரி நீர் இன்று நிறுத்தப்பட்டது.
தொடர் மழை காரணமாக அணைக்கு வரக்கூடிய தண்ணீரை அப்படியே வெளியேற்றி வந்ததால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து ஐந்து நாட்களாக 119 அடியில் நீடித்து வந்தது. இந்நிலையில், தமிழக கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் திறக்கப்பட்டு வந்த உபரி நீரும் இன்று காலை 10 மணி முதல் நிறுத்தப்பட்டது. கடந்த 5 நாட்களில் சுமார் 7 டிஎம்சி அளவுக்கு உபரிநீர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்பொழுது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 100 கனஅடி வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால் அணைக்கான நீர்வரத்து குறைந்து வந்தாலும் தற்பொழுது வரும் நீரை கொண்டு மேட்டூர் அணை நாளை மதியத்திற்குள் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.