தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு: OPS - 0 ; EPS - 1 : உச்சநீதிமன்ற தீர்ப்பின் விவரம்!

அதிமுக பொதுக்குழு: OPS - 0 ; EPS - 1 : உச்சநீதிமன்ற தீர்ப்பின் விவரம்!

JananiGovindhan

அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதன் மூலம் அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு எதிரான தீர்ப்பு வந்ததால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், “கட்சி விதிகளுக்கு புறம்பான முறையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. ஆகையால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும்.” என தெரிவித்திருந்தது.

அதேவேளையில், தேர்தல் ஆணையத்திடம் பொதுக்குழு முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும் தேர்தல் ஆணையத்தை விரைவாக முடிவெடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டது. மேலும், ஈரோடு-கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக உடனடியாக முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு, இரட்டை இலை சின்னம் யாருக்கு என்கிற கேள்வி இதுவரை ஏழவில்லை என குறிப்பிட்ட தேர்தல் ஆணையம், தக்க சமயத்தில் தேர்தல் அதிகாரி சின்னம் குறித்து முடிவெடுப்பார் என உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்திருந்தது. இதனையடுத்து, வழக்கின் தீர்ப்பு நிலுவையில் உள்ள சூழலில், இடைக்காலமாக ஈரோடு-கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை முடிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் EPS தரப்பும் பங்கேற்கலாம் எனவும் முடிவு என்ன என்பதை பொதுக்குழுவின் தலைவரான தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவின்படி இரட்டை இலை சின்னம் இபிஎஸ் ஆதரவு வேட்பாளருக்கு கிடைத்துள்ள சூழலில், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்று அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆகையால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அளிக்கும் தீர்ப்பு இரட்டை இலை சின்னம் இபிஎஸ் வசம் இருக்குமா, அல்லது ஓபிஎஸ் வசம் செல்லுமா என்பதை முடிவு செய்யும் என்பதால் அதிமுக பொதுக்குழு தீர்ப்பு மீதான ஆவல் பெருமளவில் அதிகரித்தே இருந்தன.

இந்த நிலையில், சரியாக இன்று காலை 10.30 மணியளவில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் அமர்வு தீர்ப்பை வாசிக்கத் தொடங்கின. அதன்படி, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அதிமுக பொதுக்குழு செல்லும் என்று அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கின்றன.

இதனையடுத்து காலை முதலே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பாலை வார்த்தது போன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கி இருந்தாலும், பன்னீர் செல்வம் தரப்புக்கு புளியை கரைத்தது போலவே இருக்கிறது என்றும், இதன் மூலம் தர்ம யுத்தம் நடத்தி தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்புக்கு வித்திட்ட ஓ.பி.எஸின் அரசியல் வாழ்வு இதோடு முடிகிறதா என்றெல்லாம் அரசியல் நோக்கர்கள் தத்தம் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.