ஈஷா மையத்தில் உள்ள 2 பெண்களை மீட்டுத்தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பெண்களின் தந்தை காமராஜ் என்பவர் மேல்முறையீடு செய்திருந்தார். விசாரணையின்போது, “ஜக்கி வாசுதேவ் அவரது மகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டு பிற பெண்களை மொட்டையடித்து சன்னியாசிகளாக யோகா மையங்களில் வாழ்வதற்கு ஏன் ஊக்குவிக்கிறார்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
மேலும் ஈஷா மையத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதனையடுத்து கடந்த சில தினங்களாக ஈஷா மையத்தில் தமிழக காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஈஷா மையம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி முறையிட்டார்.
அப்படி அது விசாரணைக்கு வந்தபோது குறிப்பிட்ட இரண்டு பெண்களும் காணொளி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜரானதாக மூத்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதில் பெண்களின் எதிர்காலம் கருதி, நீதிமன்ற அறையில் விசாரணை நடைபெறாமல் நீதிபதிகளின் அறையில் இரண்டு பெண்களிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது இரண்டு பெண்களும் எவ்வித கட்டாயமும் இன்றி ஈஷா மையத்தில் உள்ளதாகவும், தங்களுடைய விருப்பத்தின் பேரிலேயே தங்கி இருப்பதாகவும் சொன்னதாக தலைமை நீதிபதி தெரிவித்தார்.
இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதாகவும், சென்னை உயர் நீதிமன்றம் கேட்ட விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
காவல்துறையினர் ஈஷா மையம் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டதோடு வழக்கை, அக்டோபர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.