தமிழ்நாடு

தமிழகத்தில் ஏன்‌‌‌ உள்‌ளாட்சி தேர்தலை நடத்தவில்லை ? - உச்சநீதிமன்‌றம்

தமிழகத்தில் ஏன்‌‌‌ உள்‌ளாட்சி தேர்தலை நடத்தவில்லை ? - உச்சநீதிமன்‌றம்

webteam

தமிழகத்தில் இன்னும் உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது ஏன் என தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த ஜனவரி மாதமே தேர்தல் நடத்தப்படும் என்று கூறிய நிலையில் இன்னும் ஏன் தேர்தலை நடத்தவில்லை என தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக 4 வாரத்திற்குள் பதில் அளிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக, தமிழக உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையர் மற்றும் செயலாளர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மாநில தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராகி, நீதிமன்ற தெரிவித்த காலக்கெடுவுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாமல் போனதற்கு சட்டப்பிரிவு 28-ன் கீழுள்ள பிரிவுகளை தமிழக அரசு நீக்கியதும் தொகுதி மறுசீரமைப்பு பணிகள் முடியாததுமே காரணம் என விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நீதிமன்றம் உத்தரவிட்ட படி தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும், இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்திருந்தனர்.  இதனையடுத்து உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அடுத்த 4 வாரத்திற்குள் மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.